எடப்பாடி பழனிசாமி VS அண்ணாமலை.. மோதலுக்கு காரணம் என்ன? பின்னணியில் இவ்வளவு பெரிய அரசியலா
கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த மோதல் தற்செயலாக நடந்தது அல்ல. அதிமுக – பாஜக கூட்டணி இருக்கும்போதே அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி இடையே உரசல் தொடங்கிவிட்டது. அதன் காரணத்தை அலசும் தொகுப்பு இது.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை மையமாக வைத்து, "திமுக - பாஜக இடையேயான ரகசிய கூட்டணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது." என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதையடுத்து எடப்பாடி - அண்ணாமலை இருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார். அதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். ஏன் அது எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட போது தெரியவில்லையா.
அண்ணாமலைக்கு என்னை விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வேலை. அவர் வேறு என்ன செய்திருக்கிறார். மைக்கை கண்டால் அவருக்கு வியாதி. உடனே பேசத் தொடங்கிவிடுவார். எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். வாயும் நாக்கும் மட்டுமே முதலீடு.” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ஒரு அமைச்சரின் கையை, காலை பிடித்து, மீண்டும் சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போனவர் எடப்பாடி. அதனால் தயவு செய்து எனக்கு நேர்மையை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். ஒரு புரட்சி தலைவர், புரட்சித் தலைவி நடத்திய கட்சியை வைத்து கூவத்தூரில் என்ன அநியாயம் செய்தீர்கள்.
தவழ்ந்து தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு தன்மானம் மிக்க ஒரு விவசாயினுடைய மகனை, பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது.” என்று கூறியிருந்தார்.
இந்த வார்த்தைப் போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிமுகவினர் அண்ணாமயையும் பாஜகவினர் எடப்பாடியையும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த மோதல் இப்போது தொடங்கவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி இணக்கமாக இருந்தபோதே எடப்பாடி – அண்ணாமலை இடையே கொங்கு பவர் பாலிடிக்ஸ் அரசியல் உரசிக் கொண்டிருந்தது. கூட்டணி உடைந்த நிலையில், அந்த பவர் பாலிடிக்ஸ் மோதலாக வெடித்துள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
இதுகுறித்து கொங்கு மண்டல அரசியல் வல்லுநர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றாக கொங்கு மண்டலம் உள்ளது. கடந்த காலங்களில் அதிமுக நூலிழையில் ஆட்சியைப் பிடிக்கவும், தி.மு.க அதே நூலிழையில் ஆட்சியை தவறவிட்டதற்கும் கொங்கு மண்டலம் காரணமாக இருந்துள்ளது.
எம்ஜிஆர் காலம் தொடங்கி எடப்பாடி பழனிசாமி காலம் வரையிலும் (2021 சட்டசபை தேர்தல்) அதிமுகவுக்கு அங்கு தனி செல்வாக்கு உள்ளது. அந்த சூட்சமத்தை புரிந்து கொண்ட பாஜகவும் கொங்கு மண்லத்தை டார்கெட் செய்ய தொடங்கியது. அதிமுகவில் எடப்பாடி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு பிரதானமாக உள்ள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல, பாஜகவிலும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலையை தங்களின் மாநில தலைவராக நியமித்தனர்.
அண்ணாமலையின் பெயருக்கு 'தீரன்’ என பட்டம் போட்டுக் கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் 'தீரன் அண்ணாமலை’ என்ற பெயரில் தொடர்ந்து ஏராளமான பதிவுகள் போடப்படுகின்றன. அதிமுக, திமுக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பாஜகவுக்கு இழுக்க தொடங்கினார்கள். கூடவே அண்ணாமலை 2026 முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜகவினர் பரப்பினார்கள்.
கூட்டணியில் இருந்து கொண்டே, தங்களின் மண்டலத்தில் தங்களின் சமுதாயத்தில் இருந்து இன்னொரு பவர் சென்டர் உருவாவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. கொங்கு மண்டல அரசியலில் வலுவாக காலூன்றி விட்டால், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிடலாம் என்று பாஜகவினர் கணக்கு போடுகின்றனர். அந்த அடிப்படையில் தான் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காலி செய்தனர். தொடர்ந்து எடப்பாடியை டார்கெட் செய்கின்றனர்.
அண்ணாமலையின் அரசியலை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே நன்கு புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, 'மேலே BOSS இருக்கும்போது கீழே இருக்கவங்க பத்தி எதுக்கு யோசிக்கணும்.’ என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, 'நாங்கள் எல்லாம் BOSS இல்லை. BOSS எல்லாம் டெல்லியில் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். வரும் காலத்தில் யார் BOSS.. யார் BOSS இல்லை என்று தெரியும்.’ என்று கூறியிருந்தார்.
அப்போது இருவரும் BOSS என குறிப்பிட்டது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி தமிழ்நாட்டு அரசியலில் ஆழமாக தடம் பதிப்பதை பற்றிதான். அந்த பவர் பாலிடிக்ஸ் இப்போதும் தொடர்கிறது. அந்த வகையில் இருவருக்குமான வார்த்தை போர் என்பது இப்போதைக்கு ஓயாது.“என்றனர்.












Click it and Unblock the Notifications