தோலுரித்து விட்டதாம் ருத்ர தாண்டவம் படம்.. ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய இந்து மக்கள் கட்சி
கோவை: ருத்ர தாண்டம் திரை விமர்சனம் எப்படி இருக்கிறது என்று மக்கள் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருந்தால், இந்த படத்தை தாங்கள் வரவேற்பதாக கோவையில் திரையரங்குகளுக்கு ருத்ர தாண்டவம் திரைப்படத்தை பார்க்க வந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.
Recommended Video
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதியான இன்று, வெளியாகியுள்ளது.
கோவையில் திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அப்படம் வெளியான திரையரங்கில் சிறப்பு பூஜை செய்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ஜுன் சம்பத்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மதம் மாற்றம் செய்யும் நபர்களை தோலுரித்துக் காட்டும் விதமாகவும் போதைப் பொருட்களிலிருந்து இளைஞர்களை காப்பது எவ்வாறு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ருத்ர தாண்டவம் திரைப்படம் இயக்கப்பட்டு உள்ளதாக கூறினார். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாக வேண்டும் என்றும், ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தங்களின் முழு ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு
முன்னதாக, நேற்று, மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களை வெளியிடுவதை அரசு தடை செய்ய வேண்டும் என்றும் ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போவதாகவும், முடிந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு கோரிக்கை
திரைப்படங்களில் கிறிஸ்தவ மக்கள் குறித்து இழிவாக பேசப்படுகிறது. கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது. மேலும் மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களை வெளியிடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று, லியோன் தெரிவித்திருந்தார்.

வரவேற்பு ஏன்
மதம் மாற்றுவது தொடர்பான காட்சிகளை ருத்ர தாண்டவம் படத்தில் காட்டியிருக்கிறார்கள். டிரைலரிலும் அது காண்பிக்கப்பட்டது. எனவே கிறிஸ்தவ அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரம், முதல் முறையாக, இதுபோன்ற விஷயங்களை காட்டியுள்ளதாக இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications