கோவை தாபாக்களுக்கு செக்.. மதுப் பிரியர்களுக்கு ஷாக்.. ஆக்ஷனில் இறங்கிய வருவாய்த் துறை அதிகாரிகள்
கோவை: கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட தாபாக்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமாக விளங்கும் கோவை மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் சமீப காலமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து அதிக அளவிலான குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. புறநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஐடி இளைஞர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை, சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். புறநகர்ப் பகுதி கல்லூரிகள், ஐடி நிறுவனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதால் அடிக்கடி அதிரடி ஆய்வு மேற்கொண்டு கோவை மாநகர போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை புறநகரப் பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட தாபாக்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
கோவை புறநகர்ப் பகுதிகளில் அதிக அளவிலான தாபாக்கள் எனும் குடில் உணவகங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. கோவில்பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி தாபாக்கள் அதிக அளவில் உள்ளன. இந்த தாபாக்களில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் மற்றும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அன்னூர் பகுதியில் செயல்பட்ட 3 தாபாக்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று தாபாக்களையும் போலீசார் உதவியுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதேபோல, மேட்டுப்பாளையம், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த பத்துக்கும் மேற்பட்ட தாபாக்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications