‘ஒழுங்கா கேளுங்க.. ஒழுங்கா பதில் சொல்றேன்..’ - மீண்டும் ப்ரஸ் மீட்டில் சீறிய சீமான்
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த வாரம் புதுச்சேரியில் செய்தியாளரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்கள் ஒழுங்காக கேளுங்கள். நான் ஒழுங்காக பதில் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மழை பாதிப்புகளுக்கு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. நீர்த்தேக்கங்களை பராமரிக்கவில்லை. ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. இதையே இன்னும் எத்தனை வருடங்கள் பேசி கொண்டிருப்பது.

கோபம் வருமா வராதா
செங்கோட்டையன் என் மதிப்பிற்குரியவர். தவெகவில் இணைந்த அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். மற்றபடி அதில் நான் கருத்து சொல்லவில்லை. ஒவ்வொரு கட்சியும் பலத்தை அதிகரிப்பதற்காக கூட்டணி வைப்பார்கள். நான் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. என்னை நம்பியுள்ள 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். என்னுடைய வெற்றி எனக்கானது இல்லை. என்னுடைய தோல்வியும் அப்படித்தான்.
செய்தியாளர் சந்திப்பில் கேள்வியை கேள்வியாக வைத்தால் பிரச்சனையில்லை. கேள்வியை கேட்கத் தெரியாமல் கேட்டு, அதற்கு விளக்கம் கூறினால் 'மரியாதையாக பேசுங்கள்' என்று சொன்னால் கோபம் வருமா வராதா. நீங்கள் ஒழுங்காக கேளுங்கள். நான் ஒழுங்காக பதில் கூறுகிறேன். நல்ல கேள்விகளை முன் வைத்தால், நான் அழகான பதில்களை கூறுவேன்.
மெட்ரோ திட்டம் தோல்வி
எப்படி சண்டை செய்ய வேண்டும் என்பதை ஐந்து வயதில் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். என்னிடம் இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டோம் என்று செய்தியாளர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டேன். இது பல்வேறு நாடுகளில் தோல்வியடைந்த திட்டம். எங்களை பொறுத்தவரை இருக்கிற சாலைகளை நன்கு பராமரிக்க வேண்டும்.
படிப்பதற்கு நல்ல பள்ளிக்கூடம், மருத்துவத்திற்கு நல்ல மருத்துவமனை எல்லாம் கட்டி தராமல் இருக்கிறார்கள். பசியோடு இருக்கின்ற மக்களைப் பற்றி கவலைப்படாமல், பறக்கின்ற மக்களை பற்றி நினைக்கிறார்கள். தனியார் முதலாளிகள் லாபம் ஈட்டும் தொழிலாக கல்வி மாறியதால் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக அரசு போக்குவரத்து தரம் உயர்த்தப்படுவதில்லை.
அரசுப் பள்ளி தரம்
அரசு பள்ளிகளில் தரம் குறைவதால் தான் அங்குள்ள குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். கேரளா மற்றும் டெல்லியிலும் அரசுப் பள்ளியின் தரம் உயர்ந்துள்ளதால் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கிறார்கள். அரசால் கொடுக்க முடியாத ஒரு கல்வியை, மருத்துவத்தை தனியார் முதலாளி கொடுப்பார் என்றால் அரசு தோற்றதாக தான் அர்த்தம்.
என்னிடம் ஆட்சியை கொடுங்கள். அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா இல்லையா என்று பாருங்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பது எங்களின் சட்டமாக இருக்கும், அமைச்சர் முதல் அனைத்து அரசு அலுவலர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது எங்களின் சட்டமாக இருக்கும்.
அரசு மருத்துவமனை
இதன் மூலம் அரசுப் பள்ளி தரம் தானாக உயரும். தம்பி செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு தான் செல்கிறார். அரசு மருத்துவமனையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் எவ்வாறு நம்பி செல்வார்கள். மேலும் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு தான் சென்றனர்." என்றார்.












Click it and Unblock the Notifications