Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச்
கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் களம் அப்படியே மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இன்றுகூட அதிமுகவின் 3 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தென்மேற்குப் பருவமழையால் நமக்கு நிலச்சரிவுகளோ பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கேரளாவில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்கள் தமிழகத்தில் எங்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

அதனடிப்படையில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்போதே ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் எதிர்காலம்
அடுத்ததாக வடகிழக்கு பருவமழை வரும்போதும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேடி வந்து கேட்காதளவுக்கு, உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் ஆணை. தமிழகத்தில் ஒரு தூய்மையான நல்லாட்சியைத் தருவதற்காக முதலமைச்சர் நாள்தோறும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். இதைப் பார்த்துவிட்டுப் பலரும் நமது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவின் எதிர்காலம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோரின் காலம் வேறு. இன்றைய சூழல் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இன்றைய தேதியில் நல்லாட்சி நடத்தக்கூடிய சிறந்த தலைவராக விளங்கும் தளபதி விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் வரை அவரே முதலமைச்சராக நீடிப்பார். அவரது பின்னால் அணிவகுக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
அமைச்சர்கள் ஆய்வு
ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவரவர் சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஆய்வுக்குப் பிறகு அங்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை அதிகாரிகள், மக்களிடம் கேட்டறிவார்கள். அதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிச்சயம் நிறைவேற்றுவார்கள்," என்றார்.












Click it and Unblock the Notifications