கொந்தளிப்பில் கோவை.. லைவ் கேமரா பொருத்திய தேர்தல் ஆணையம்.. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவையில் பதட்டமான வாக்குச்சாவடிகள் நேரலையில் கண்காணிக்கப்படுகிறது என கலெக்டர் சமீரன் கூறினார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கான இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
முன்னதாக கோவையில் தேர்தல் விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என பாஜக, அதிமுக குற்றம்சாட்டியது. முன்னதாக நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

எஸ்பி வேலுமணி கைது
கோவை மாநகராட்சி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி வேலுமணி கோரிக்கை வைத்தார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது. ஆளும் கட்சி நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். இதை தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தாலும் நடவடிக்கை இல்லை. கோவையில் துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என எஸ்பி வேலுமணி கூறினார். தர்ணாவில் ஈடுபட்ட எஸ்பி வேலுமணி உள்பட 8 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆர்வம்
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோவை மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். நிர்மலா பெண்கள் கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் கோவை கலெக்டர் சமீரன், தனது வாக்கினை பதிவு செய்தார். தேர்தல் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பதட்டமான வாக்குச்சாவடிகள்
கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 802 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க உள்ளனர். 2303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 424 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள்
பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அங்கு நடப்பவைகளை அனைத்து கட்சிகளும் நேரலையில் பார்க்கலாம். காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் முறைகேடுகளை தடுக்க 86 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 51 நுண் பார்வையாளர்கள் வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 10 ஆயிரத்து 133 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 2770 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்ஜினியர்கள்
வாக்குப் பதிவு இயந்திர கோளாறுகளை சரி செய்ய பெல் இன்ஜினியர்கள் 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் ஆட்கள் உள்ளார்களா என்பது குறித்து எல்லா பகுதிகளிலும் தனிப்படையினர் ஹோட்டல், லாட்ஜ், திருமண மண்டபங்களில ஆய்வு செய்தனர். யாரையும் பார்க்க முடியவில்லை. வாகன சோதனையும் செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறை மற்றும் பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்., 22ல் 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது" என அவர் தெரிவித்தார்.

போட்டியின்றி தேர்வு
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications