கோவையில் சரிபாதியை கைப்பற்றும் திமுக.. ஸ்டாலினிடம் உறுதியாக சொன்ன செந்தில் பாலாஜி.. என்ன நடந்தது?
சென்னை: கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 5ல் திமுக வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மகளிர் வாக்குகள் பெரும்பாலும் தவெக பக்கம் சென்றுவிட்டதாக சொல்லப்படும் நிலையில், கொங்கு மண்டலத்தில் கணிசமான வெற்றியை ஸ்டாலின் எதிர்பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்தே அரசியல் கட்சியின் தலைமைகள் வெற்றி, தோல்வியை கணித்துவிடுவார்கள். தேர்தல் நாளன்று முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு, நேராக வார் ரூம் சென்றார்.

வார் ரூமில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் வாக்குப்பதிவை கண்காணித்துவிட்டு, பின் பென் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெண்கள் அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர். அதில் மகளிர் வாக்குகள் கணிசமாக தவெக பக்கம் பிரிவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் கொஞ்சம் டென்ஷனான ஸ்டாலின், கொங்கு மண்டல நிலவரத்தை பற்றி அறிய ஆர்வம் காட்டி இருக்கிறார். இதனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது செந்தில் பாலாஜியிடம் கோவை நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு செந்தில் பாலாஜி, கோவையில் சரிபாதி தொகுதியை திமுக கைப்பற்றும் என்று நேரடியாக உடைத்திருக்கிறார்.
இருந்தாலும் ஸ்டாலின் ஆறுதல் அடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கு வாக்களிக்க கூட செல்லாமல், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பம்பரமாக சுழன்று பார்வையிட்டுள்ளார். கடைசி நேரத்தில் கூட சில வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என்றும் பூத் ஏஜெண்ட்டுகளை முடுக்கிவிட்டுள்ளார்.
4 முனைப் போட்டி நிலவுவதால், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தோல்வி இடையிலான வாக்குகளில் சிறிய அளவிலேயே வித்தியாசம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் திமுக சில தொகுதிகளை இழக்க நேரிட்டால், அதனை கொங்கு மண்டலத்தில் பெறும் வெற்றியை வைத்து சமன் செய்ய வேண்டும் என்பதே திமுகவின் திட்டமாக உள்ளது. இதனால் மே 4 தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கும் தலைவலியாக மாறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications