"எடப்பாடிக்கு எப்போதும் என் நினைப்புதான்" ..OneIndiatamil-க்கு செந்தில் பாலாஜி சிறப்பு பேட்டி!
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் களமிறங்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நமது ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். தேர்தல் பணிகள் குறித்தும், திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்தும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக கோவையில் தேர்தல் களத்தில் அனல் தகிக்கிறது.

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி
கோவை அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதை மாற்றும் முனைப்போடு களமிறங்கி இருக்கிறது திமுக. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த முறை கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார். திமுகவின் செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கோடு, கொங்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கோவையில் களமிறக்கப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல்களில் திமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் வருகை, இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தரும் என திமுகவினர் நம்புகின்றனர். செந்தில் பாலாஜியின் வியூகங்களை நொறுக்க அதிமுகவினரும் தீவிரமாக களத்தில் செயலாற்றி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி பேட்டி
எனவே, இந்த சட்டசபை தேர்தலில் கோவை, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய பகுதி ஆகியுள்ளது. கோவை ரிசல்ட் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிய அரசியல் நோக்கர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். கோவையை கைப்பற்றுவது யார் என்பது தான் தமிழ்நாட்டின் மில்லியன் டாலர் கேள்வி.
இந்நிலையில் நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக, தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்த செந்தில் பாலாஜியிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நமது கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்களைப் பார்க்கலாம்.
கேள்வி: எப்போதுமே எனர்ஜெட்டிக்காக இருக்கிறீர்களே.. எப்படி முடிகிறது? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்? எப்படி வொர்க் பிரஷரை மேனேஜ் செய்கிறீர்கள்?
செந்தில் பாலாஜி: இரவில் 2 மணி நேரம் தான் தூங்குகிறோம்.. தீவிரமாக வேலை பார்த்து வருகிறோம். இன்னும் 2 நாள் தான் பிரச்சாரம் இருக்கிறது. சிறப்பாக முடித்துவிடுவோம். சில நேரம் காரில் நீண்ட தூரம் சென்றால் லேசாக தூங்குவேன். வேலைகளை பொறுத்து சாப்பாடு. எடுத்துக்கொண்ட வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்பதற்காக பணியாற்றுகிறோம்.
கேள்வி: தேர்தல் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது? கொங்கு மண்டலத்தில் எப்படிப்பட்ட ரிசல்ட் எதிர்பார்க்கலாம்?
செந்தில் பாலாஜி: பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும். எல்லோரும் எதிர்பார்ப்பதைவிட கூடுதல் சீட்களில் திமுக வெற்றி பெறும்.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவை பிரச்சாரத்தில் உங்களை அரக்கன், வைரஸ் போன்ற கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துள்ளாரே.. என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
செந்தில் பாலாஜி: கரூரில் அவர் என்னைப் பற்றி பேசி இருந்தால் என் ஊரில் வந்து என்னை விமர்சிக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம். கோவையில் வந்து மட்டும் என்னைப் பற்றிப் பேசியிருந்தால் நான் கோவையில் நிற்பதால் என்னை விமர்சிக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எடப்பாடி தமிழ்நாட்டில் எங்கு போனாலும் என் பெயரைத்தான் உச்சரிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்கத்தில் கூட என் நினைவுதான் இருக்கிறது என நினைக்கிறேன்.
கேள்வி: கரூரில் பலமுறை வென்றிருந்தாலும் கோவையில் முதல் முறையாக களமிறங்குகிறீர்கள்.. கோவை தெற்கு தொகுதியில் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது?
செந்தில் பாலாஜி: உற்சாகமான வரவேற்பு இருக்கிறது. உதயசூரியனுக்குதான் ஓட்டு என உறுதியாக இருக்கின்றனர்.
கேள்வி: கோவை தெற்கு தொகுதி மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? தொகுதிக்கு என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
செந்தில் பாலாஜி: கோவையின் பொறுப்பு அமைச்சராக மாவட்டம் முழுவதும் பணியாற்றி இருக்கிறேன். அந்தவகையில் முதலமைச்சரிடம் பல்வேறு திட்டங்களை கேட்டு வாங்கி செயல்படுத்தி இருக்கிறோம். இனியும் செய்யப்போகிறோம்.













Click it and Unblock the Notifications