வேலுமணி வீட்டு திருமணம்! எடப்பாடி ஆப்சென்ட்... ஆனா சிரித்த முகத்துடன் பாஜக தலைவர்கள்! நோட் பண்ணுங்க
கோவை: அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழா நேற்று கோவையில் நடந்த நிலையில், அதில் பல அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் கூட பங்கேற்றனர். ஆனால், இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிமுகவின் பிரதான தலைவராக இருப்பவர் எஸ்.பி. வேலுமணி. எடப்பாடி முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் பவுர்புல் இடம் இவருக்கு இருந்தது.

எஸ்பி வேலுமணி இல்ல திருமணம்
இப்போதும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள வேலுமணி, அதிமுக தலைமை நிலையச் செயலாளராகவும் இருக்கிறார். இதற்கிடையே அவரது மகன் விகாஸின் திருமண விழா நேற்று மார்ச் 3ம் தேதி நடைபெற்று. கோவை ஈச்சநாரி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலுமணியின் மகன் விகாஸ்- தீக்ஷனா திருமணம் நடைபெற்றது.
இதில் பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோர் நேரில் வந்து வாழ்ந்து தெரிவித்தனர். இருவரது காலிலும் விழுந்து புதுமண தம்பதியினர் ஆசீர்வாதம் பெற்றனர். மேலும், மத்திய அமைச்சர் எல் முருகன், குஷ்பு எனப் பல பாஜக தலைவர்கள் நேரில் வந்து புதுமண தம்பதியினரை வாழ்த்தினர்.
எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை
அதேபோல அதிமுகவிலும் கூட பல்வேறு தலைவர்களும் திருமண விழாவில் பங்கேற்றனர். மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திருமண விழாவில் பங்கேற்றனர். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தேனியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்று இருந்தார் என்றும் அவர் திருமண விழாவுக்கு வரும் திட்டமே இல்லை என்றும் வேலுமணி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி திருமண விழா மட்டுமின்றி கடந்த 2024 ஆகஸ்டு 23ஆம் தேதி நடந்த நிச்சயதார்த்த விழாவிலும் பங்கேற்கவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கிறது..
பின்னணி
கூட்டணி விஷயத்தில் இருவருக்கும் இரு வேறு கருத்துகள் இருப்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி தேவையில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் கொங்கு மண்டலத்தில் திமுகவை எளிதாக வீழ்த்த முடியும் என்பதால் கூட்டணி அமைக்கலாமே என ஐடியா தருகிறார் வேலுமணி. இருப்பினும், பல விஷயங்களை யோசித்து எடப்பாடி கூட்டணி வேண்டாம் என்றே கூறுகிறார்.
இது மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா நடந்தது அனைவருக்கும் தெரியும். இதில் எஸ் பி வேலுமணி பங்கேற்றிருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவும் பங்கேற்றிருந்தார். இருவரும் கொஞ்ச நேரம் தனியாகச் சந்தித்து பேசிக்கொண்டனராம். இந்த செய்தியும் எடப்பாடி காதுகளுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே தேனியில் நேற்றிரவே விழா முடிந்தாலும் வேலுமணி இல்ல திருமணத்தில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகிவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எழும் கேள்விகள்
அதேநேரம் வரும் 10ம் தேதி தான் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் கொடிசியா வளாகத்தில் வேலுமணி திருமண வரவேற்பை ஏற்பாடு செய்து வைத்துள்ளாராம். அதில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் தலைவர்களுக்குத் தனியாகத் திருமண வரவேற்பு என்றால் பாஜக தலைவர்கள் மட்டுமின்றி அதிமுக நிர்வாகிகள் கூட ஏன் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் என்ற கேள்வியும் எழவே செய்கிறது.












Click it and Unblock the Notifications