மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள்.. 3 பள்ளிகள் மீது வழக்கு பதிவு செய்தது கோவை போலீஸ்!
கோவை: பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, சென்னை, கோவை மற்றும் சேலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற ரோட் ஷோ கடந்த 18ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தொலைவு வாகன பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயா நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது.
பள்ளி குழந்தைகளை வாகன பேரணிக்கு அழைத்து சென்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கே நேரில் சென்று விசாரணையும் நடத்தினர்.
பள்ளி குழந்தைகளுக்கு ராமர், சீதை வேடம் போட்டு கழுத்தில் காவித் துண்டை அணிவித்து பள்ளி மாணவர்களை பேரணியில் பங்கேற்க வைத்துள்ளதும் தெரியவந்தது. சின்மயா மெட்ரிக் பள்ளி, வடவள்ளி சின்மயா சி.பி.எஸ்.இ பள்ளி, ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 பள்ளிகளை சேர்ந்த 22 மாணவர்களை அழைத்து வந்து மோடி பேரணியில் பங்கேற்க வைத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து 3 பள்ளிகள் மீதும் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் அலுவலர் புகாரின் பேரில் 3 பள்ளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications