கோவை மேயர் ரேஸ்! செந்தில் பாலாஜி என்ட்ரி..! வியூகத்தை மாற்றிய எஸ்பி வேலுமணி!
கோயம்புத்தூர்: தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர மேயர் யார் என்கிற கேள்வியை விட கோவை மேயர் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்புதான் அதிகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கோவை தனது கோட்டை என நிரூபித்த எஸ்பி வேலுமணி அங்கு திமுகவை வாஸ் அவுட் செய்துவிட்டார். தற்போது கோவை மாவட்டத்தில் திமுகவிற்கு என்று ஒரு எம்எல்ஏ கூட இல்லை.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
ஆனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கோவை மாநகராட்சியை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற வேண்டும் என்பது தான் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தீர்க்கமான எண்ணம். இதற்காகவே கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை திமுகவின் செயல்வீரராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அதிமுகவை திமுக வாஸ் அவுட் செய்தார். இதற்கு முழுக்காரணம் செந்தில்பாலாஜி தான் என ஸ்டாலின் நம்புகிறார்.

ஸ்டாலின் பிளான்
இதனால் தான் கோவையை கைப்பற்ற செந்தில் பாலாஜியை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். கோவையை பொறுத்தவரை திமுக சார்பில் போட்டியிட இரண்டு பேர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. அவர்களில் ஒருவர் மீனா லோகு. மற்றொருவர் அண்மையில் திமுகவில் இணைந்த மகேந்திரன் தனது மனைவியை மேயர் வேட்பாளராக்க காய் நகர்த்தி வருகிறார். ஆனால் இங்கு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த முறை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை என்கிற முடிவில் திமுக அரசு உறுதியாக உள்ளதாக கூறுகிறார்கள்.

களமிறங்கிய செந்தில் பாலாஜி
மற்ற மாவட்டங்களில் திமுகவிற்கு சாதகமாக இருந்தாலும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை திமுகவிற்கு சாதகமான நிலை உள்ளதா? என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். இதனால் தான் ரிஸ்க் வேண்டாம் என்று மேயர் மட்டும் அல்ல நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 148 வார்டுகளிலும் சரியான வேட்பாளரை தேர்வு செய்ய செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருகிறார். இதே போல் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவரை அடையாளம் காணவும் ஒரு சில இன்டர்வியூ எடுத்து முடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

எஸ்பி வேலுமணி வியூகம்
இதனிடையே செந்தில் பாலாஜி வருகைக்கு முன்பு வரை மேயர் தேர்தலில் எஸ்பி வேலுமணி ஒரு வியூகத்தில் இருந்ததாக சொல்கிறார்கள். வழக்கம் போல் கோவை அதிமுக கோட்டை பிளஸ் பாஜக கூட்டணி என்பதால் பெரிய சிக்கல் இல்லாமல் வெற்றி பெற்றுவிடலாம் என்றே நம்பியிருந்து இருக்கிறார் எஸ்பி வேலுமணி. ஆனால் செந்தில் பாலாஜி என்ட்ரி கொடுத்த பிறகு திமுக முகாம் உற்சாகம் அடைந்துள்ளது. மேலும் கோவை மாநகராட்சியை கைப்பற்ற செந்தில் பாலாஜி மிகப்பெரிய பட்ஜெட் போட்டு பணிகளை ஆரம்பித்துள்ளதையும் எஸ்பி வேலுமணி தரப்பு மோப்பம் பிடித்துள்ளது.

பட்ஜெட் என்ன?
இதனை அடுத்து கோவை மாநகராட்சிக்கான தனது பட்ஜெட்டை எஸ்பி வேலுமணி இரண்டு மடங்காக்கிவிட்டதாக கூறுகிறார்கள். இது தவிர மேயர் வேட்பாளரும் செலவிட வேண்டிய தொகையையை வேலுமணி இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் இதற்கு முன்பு வரை மேயர் பதவிக்கான ஆசையுடன் வேலுமணியை சுற்றி வந்த சிலர் கழன்று கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னரே கோவைக்கான மேயர் வேட்பாளரை வேலுமணி இறுதி செய்துவிட்டதாகவும், அவர் வேறு யாரும் இல்லை அழகிப்போட்டியில் பட்டம் வென்ற சோனாலி பிரதீப் தான் என்கிறார்கள்.

மெஜாரிட்டி கிடைத்தால் மேயர் பதவி
கடந்த இரண்டு வருடமாகவே சோனாலியும் மேயர் பதவி ஆசையில் கோவையை வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வார்டு மெம்பராக வென்று மெஜாரிட்டி கிடைத்தால் மேயர் பதவி உறுதி என்பதால் அவர் கூடுதல் தெம்புடன் வலம் வருவதாக கூறுகிறார்கள். இதே போல் திமுக சார்பில் மேயர் வேட்பாளர் செய்யும் செலவை விட அதிகம் செலவு செய்ய சோனாலி தரப்பும் தயாராகவே இருப்பதாகவும் இதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது தான் வேலுமணியின் வியூகம் என்கிறார். மேலும் வார்டு கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு செய்யப்பட இருப்பதால் ஜாதி ஒரு தடையாக இருக்காது என்பதும் வேலுமணியின் கணிப்பாக உள்ளது. இப்படி வேலுமணி மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே களத்தில் இறங்கியுள்ளதால் கோவையில் தேர்தல் ஜூரம் தகிக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications