மேயர் யார்?.. இரவுவரை சிறைபிடித்த போலீஸ்.. காலையில் வாக்களிக்க வந்த போது சீறிய வேலுமணி.. பின்னணி!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் தேர்தலுக்கு பின் வெளியூர் ஆட்களை வைத்து முறைகேடுகளை செய்ய திமுக திட்டமிடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தர்ணா போராட்டம் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தர்ணா செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது. ஆளும் கட்சி நிர்வாகிகள் பண விநியோகம் செய்கிறார்கள். இதை பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி எஸ்பி வேலுமணி போராட்டத்தில் இறங்கினார்.

கைது
இவர் மொத்தம் 4 மணி நேரம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இரவு வரை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த இவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று இரவு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் குனியமுத்தூரில் வாக்களித்தார்.

வேலுமணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த வேலுமணி அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கோவை மாவட்டத்திற்கு நாங்கள் நிறைய செய்து இருக்கிறோம். 50 ஆண்டுகளில் எட்டாத வளர்ச்சியை கோவை கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கொடுத்தோம். அதனால் கோவை மாவட்ட மக்கள் முழுமையாக அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட கோவையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது.

வேலுமணி பேட்டி
இதனால்தான் கோவையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டி வருகிறது. கோவையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று திமுக தில்லு முல்லு வேலைகளை செய்து வருகிறது. அதற்காக நீதிமன்றமே நேற்று உத்தரவிட்டு கோவைக்கு கூடுதல் பார்வையாளரை போட்டுள்ளனர். திமுகவிற்கு இன்னும் தோல்வி பயம் உள்ளது. இன்னும் வெளியூர் ஆட்கள் சில இடங்களில் இருக்கிறார்கள்.

திமுக முறைகேடு
காலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்கள். இவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு காவல்துறை உடந்தையாக போய்கொண்டு இருக்கிறார். தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுகவினர் விதியை மீறுகிறார்கள். கோவையில் அதிமுகதான் ஜெயிக்கும். அதோடு கோவையில் அதிமுகவினர்தான் இந்த முறை மேயராக வருவார். தேர்தலுக்கு பின் மேயர் பற்றி முடிவு எடுப்போம்.

என்ன நடக்கிறது?
வெளியூர் ஆட்கள் வெளியேறிவிட்டதாக ஆட்சியர் சொல்வதை கேட்க முடியாது. நாங்கள் அமைதியாக யாருக்கும் தொந்தரவு செய்யாமல்தான் அங்கு தர்ணா செய்தோம். அதற்கே கைது செய்து இரவு வரை வைத்து இருந்தனர். இன்னும் வெளியூர் திமுகவினர் இங்கே இருக்கிறார்கள். தேர்தலுக்கு பின்பும் இவர்கள் முறைகேடு செய்வார்கள். அதிமுக வென்ற இடங்களில் திமுக வென்றதாக அறிவிக்கும் வகையில் இவர்கள் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது என்று எஸ்பி வேலுமணி ஆளும் திமுக தரப்பு மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.












Click it and Unblock the Notifications