பாட்டிலுக்கு 10 ரூபா..அடியோடு மாறுது TASMAC! இனி எல்லமே MRPக்குள்ளேதான்! ஆக்ஷனில் அமைச்சர் விக்னேஷ்
கோவை: மதுபாட்டிலுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழல் வரி இனி எம்.ஆர்.பி விலைக்குள்ளேயே இடம்பெறும் எனவும், ரூ.10 கூடுதல் வசூல் செய்தால் முதலில் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் செய்தால் பணி நீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டாஸ்மாக் பாட்டில்களுக்கு புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அமைச்சர் விக்னேஷ்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுபாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படும்.
சுற்றுச்சூழல் வரி இனிமேல் தனியாக வசூலிக்கப்படாமல், மதுபாட்டிலின் மொத்த விற்பனை விலைக்குள்ளேயே சேர்க்கப்படும். அரசின் ஒரு ரூபாய் வருவாய் கூட தனியார் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

அமைச்சர் விக்னேஷ்
டாஸ்மாக் பாட்டில்களின் விலை நிர்ணயம் தொடர்பாகப் புதிய சட்டத்தையே விரைவில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவையும் மீறி, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்தால் உடனடியாக முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வரை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
டாஸ்மாக்
கடந்த 20 ஆண்டுகாலமாக டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வேதனையைத் தீர்க்கத் தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் பரவலாக மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஊதிய உயர்வு
கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு பரிசீலனையில் இருக்கிறது. டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் வெள்ளையாக வெளியே தெரிகிறது. பிறகு வெள்ளை அறிக்கை எதற்கு? ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் குற்றச்சாட்டு சொல்லி வருகிறோம்.
டாஸ்மாக் கடை
717 கடைகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடவும், இடம் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான, பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.














Click it and Unblock the Notifications