போதை ஊசி, மாத்திரை, கஞ்சா.. குறிவைக்கப்படும் மாணவர்கள்.. பதறவைக்கும் கோவை.. 10 பேர் அதிரடி கைது
கோவை: போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐடி நிறுவனம் மற்றும் பல்வேறு தொழில்களுக்குப் புகழ்பெற்றது கோவை மாவட்டம். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைக்காக புறநகர்ப் பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கோவையில் போதைப் பொருள் விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கோவையின் புறநகர்ப் பகுதிகளான செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள், தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 400க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா, போதை மாத்திரைகள், கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் போதைப் பொருள், கஞ்சா, ஊசி, போதை மாத்திரைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலும், மாணவர்கள் அதற்கு அடிமையாவதைத் தவிர்க்கும் வகையில் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் சிறப்பு படை போலீஸ் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அசிஸ்டெண்ட் கமிஷனர்களான ஸ்டாலின், சரவணகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் காவல் துறையினர் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். சந்தேகப்படும்படி இருந்த அந்த நபர்களை விசாரித்தபோது, அவா்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், வெளியூா்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து கோவை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 10 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை கரும்புக்கடையைச் சோ்ந்த முகமது நெளபல் (29), முஜிப் ரகுமான் (29), ரிஸ்வான் சுஹைல் (24), முகமது சபீா் (24), மன்சூா் ரஹ்மான் (27), சனூப் (27), முஜிபுா் ரஹ்மான் (32), அனீஸ் ரஹ்மான் (22), சா்ஜுன் (27), மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த பிரகாஷ் (31), கோவை, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா, 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 செல்போன்கள், இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications