வனத்துறையின் ஜீப் கண்ணாடியை அடித்து உடைத்த மக்கள்.. ஆபாசமாக திட்டி வெளியேற்றம்.. காரமடையில் பரபரப்பு
கோவை: கோவையை அடுத்த காரமடையில் வனத் துறை ஊழியர்களை காது கூசும் ஆபாச வார்த்தைகளால் திட்டி சிறைபிடித்து, வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி பல்வேறு மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும், காட்டுப் பகுதிக்குள் சட்ட விரோதமாக மர்ம நபர்கள் நுழைந்து காட்டு முயல், காட்டுப் பன்றி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் வனத் துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதோடும் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சமீபகாலமாக வன விலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கோவையை அடுத்த காரமடையில் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தொடர்பாக கீழ்கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை வனத் துறையினர் கைது செய்வதற்காக சென்றபோது அதிகாரிகளை சிறைபிடித்து, அவர்களது வாகனத்தை உள்ளூர் வாசிகள் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், காரமடையை அடுத்த கீழ்கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது வீட்டில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்ததை இரு தினங்களுக்கு முன்னர் வனத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, காட்டுப் பன்றியை வேட்டையாடிய குற்றத்துக்காக வெங்கடேஷைப் பிடிப்பதற்காக வனத் துறையினர் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டில் இருந்த வெங்கடேஷ் தப்பியோடியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து போலீஸார் சென்றுள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷ் வீட்டில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் காரமடை வனவர் சகாதேவன் தலைமையில் இன்று காலை வனப் பணியாளர்கள் கண்டியூர் கிராமத்திற்குச் சென்று வெங்கடேஷை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, அங்கிருந்தவர்கள் கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத் துறையினர் சென்ற ஜீப் மீது கல்லெறியத் தொடங்கினர். இதனை சற்றும் எதிர்பாராத வனத் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். கல் வீச்சு சம்பவத்தில் ஜீப்பில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வனத் துறையினரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர். இதையடுத்து, வனத் துறையினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இதுகுறித்து, காரமடை போலீஸாருக்கு வனத் துறையினர் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததற்காக வனத் துறையினர் கைது நடவடிக்கைக்கு சென்ற இடத்தில் உள்ளூர்வாசிகள் சிலரால் சிறைபிடிக்கப்பட்டு அவர்களது வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications