பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
சென்னை: தவெக ஆட்சி பொறுப்பே ஏற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. பல்வேறு துறைகளில் அமைச்சர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக்கிலும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது, கூடுதல் தொகை வசூலிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்யும் பணியாளர்கள் அடுத்த நாள் பணியில் இருக்க மாட்டார்கள் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்கில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளையும் விரைவாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனை
இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விக்னேஷ், விற்பனை விலையை விட அதிகமாக பணம் வசூலிப்பது முற்றிலும் ஏற்க முடியாதது என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் கொடுத்துள்ள அறிவிப்பில், "கடைக்காரர்களிடம்'பாட்டிலுக்கு 10 ரூபாய் மட்டும் வாங்க வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கிறோம். ஸ்டிக்கருக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம் என்பது தான் நம் நிலைப்பாடு. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் நோக்கம். ஜூன் மாத இறுதிக்குள் எம்.ஆர்.பி. விலையை மீறி பணம் வசூலிக்கும் நடைமுறையை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.
பணியில் இருக்க மாட்டார்கள்
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் அடுத்தநாள் பணியில் இருக்க மாட்டார்கள். அதேநேரத்தில், நேர்மையாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடும் சிலரின் செயலால் அனைத்து பணியாளர்களின் பெயரும் பாதிக்கப்படக் கூடாது. கூடுதல் பணம் வாங்கும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாக இந்தப் பழக்கம் தொடர்கிறது. அதனால் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.
பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தவெக கடுமையாக எதிர்க்கிறது. நுகர்வோர் பணம் குறிப்பிட்ட தனி நபர்களுக்கு செல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எந்த கடையில் கூடுதல் கட்டணம் புகார் வருகிறதோ, அங்கு சென்று பாருங்கள் சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் இருக்க மாட்டார். இத்துறையை வியாபார நோக்கில் பார்க்க மாட்டோம். மக்களுக்கு எது நல்லதோ அந்த முடிவை தான் எடுப்போம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications