43,84,40,00,000 கோடி.. கோவைக்கு இனி குதுகாலம் தான்! முதலீடுகளை அள்ளி அசத்திய முதல்வர் ஸ்டாலின்! மாஸ்
கோவை: கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 43,844 கோடி முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கோயம்புத்தூரில் TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், 42,792 கோடி ரூபாய் முதலீட்டில், 96,207 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், 1,052 கோடி ரூபாய் முதலீட்டில் 4,502 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தித் தொழில் மேம்பாட்டிற்காக, ஆவாரம்பாளையத்தில் 14.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக, மூப்பேரிப்பாளையத்தில், 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், 9 நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான திட்டங்களின் விவரம் பின்வருமாறு:
1) Yield Engineering Systems அமெரிக்காவைத் தலைமையமாகக் கொண்ட, உலகின் முன்னணி குறைக்கடத்தி உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், கோவையில் தனது உற்பத்தி மற்றும் பொறியியல் திட்டத்தை அமைத்துள்ளது. உலக அளவில், குறைக்கடத்தி உதிரிபாகங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்நிறுவனம் கோவையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில் 50 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், ஒரு விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
2) Mindox சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம், குறைக்கடத்தி உதிரிபாகங்கள் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், 398 கோடி ரூபாய் முதலீட்டில் 460 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், கோவையில் உள்ள அதன் உற்பத்தித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
3) Caliber Interconnects உதிரிபாகங்கள் சிங்கப்பூரைத் தலைமையமாகக் கொண்ட இந்த நிறுவனம், குறைக்கடத்தி மற்றும் மின்னணு திட்டங்களை திருநெல்வேலியில் அமைத்துள்ளது. கோவை மற்றும் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு, குறைக்கடத்தி மற்றும் மின்சக்தி மின்னணு உற்பத்தி சூழலை மேம்படுத்தும் நோக்கில், 3000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ஒரு விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
4) சக்தி ஏர்கிராஃட் இண்டஸ்ட்ரி லிமிடெட் திருப்பூர் மாவட்டத்தில் நவீன இரு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானங்களின் அசெம்ப்ளி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் அதிநவீன ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் முதலீட்டுடன் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 200 நபர்களுக்கும், மறைமுகமாக சுமார் 1,000 நபர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேற்கண்ட முதலீடுகள், ஜவுளி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பொது உற்பத்தி மற்றும் சுற்றுலா துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்முதலீடுகள் பரவலாக கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி. பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1052 கோடி ரூபாய் முதலீட்டில் 4502 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications