திருச்சூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டது எப்படி?
கோவை: கேரளாவில் மது போதையில் இருந்த வடமாநில தொழிலாளியால் ஓடும் ரயிலிலிருந்து டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு பாட்னா சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ஏப்ரல் 2ம் தேதி மாலை புறப்பட்டது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக (டி.டி.இ.) பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.டிக்கெட் பரிசோதகர் வினோத்துக்கு எர்ணாகுளம் முதல் ஈரோடு வரை பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது.

அவர் ஒவ்வொரு பெட்டிகளிலும் டிக்கெட் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எஸ்-11 பெட்டியில் டிக்கெட் பரிசோதனை செய்யச் சென்றபோது, அங்கு வட மாநில தொழிலாளர்கள் அதிகமாகப் பயணித்து கொண்டிருந்தார்கள் அதில் ரஜினிகாந்த் என்ற பயணி மதுபோதையில், உரிய முன்பதிவு இன்றி பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிலரும் அவருடன் முன்பதிவு இன்றி பயணித்ததை டிக்கெட் பரிசோதகர் வினோத் கண்டுபிடித்தார்.
அப்போது வடமாநில தொழிலாளர்கள் வினோத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனிடையே திடீரென ஆத்திரம் அடைந்த வடமாநில தொழிலாளி வினோத், டிடிஇ வினோத்தை ஓடும் ரயிலிலிருந்து திருச்சூர் அருகே உள்ள வேலப்பையா என்ற இடத்தில் கீழே தள்ளிவிட்டார். அந்த நேரத்தில், எதிரில் வந்த மற்றொரு ரயில் வினோத் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஓடிசாவை சேர்ந்த தொழிலாளி ரஜினிகாந்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் ஓடும் ரயிலில் டிடிஇ தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ஓடும் ரயிலிலிருந்து போதை ஆசாமியால் தள்ளிவிடப்பட்டு கே.வினோத் அகால மரணம் அடைந்தார். கொலையாளிகள் மீது கடுமையான வழக்குப் பதிவு செய்து, தக்க தண்டனை வழங்க வேண்டும்.
பணியில் இருக்கும் டிடிஇ-க்கு துப்பாக்கி ஏந்திய காவலரை பாதுகாப்புக்கு வழங்க வேண்டும். அதிக பெட்டிகளை பார்க்கக் கூறி டிடிஇ-க்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. கடுமையான சட்டங்கள், தொடர் பரிசோதனை மூலம் முறையற்ற வகையில் பயணம் செய்யும் நபர்கள், குடிகாரர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளது. இதுபோல, தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டிக்கெட் பரிசோதகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சங்கம் வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications