கோவையில் பெண் விமானப்படை அதிகாரி வன்புணர்வு.. இரட்டை விரல் சோதனை செய்த அதிகாரிகள்- அதிர்ச்சி பின்னணி
கோயம்புத்தூர்: கோவையில் சக அதிகாரி மூலம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி, தனக்கு இரட்டை விரல் சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தான் பட்ட கஷ்டங்களை இவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
Recommended Video
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள பிளைட் லெப்டினன்ட் அதிகாரி அமிர்தேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார்.
கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று வரை விமானப்படை அதிகாரி அமிர்தேஷ் நீதிமன்ற காவலில் இருப்பார். இந்த வழக்கை போலீஸ் விசாரிப்பதா, விமானப்படை அதிகாரிகள் விசாரிப்பதா என்று இன்று கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட உள்ளார்.

உத்தரவு
பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் தன்னை கோவை காவல் துறையினர் கைது செய்தது தவறு என்று கூறியுள்ளார் . தான் இந்திய விமான படை நீதிமன்றம் மூலமே விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அதிகாரி, தனக்கு விமானப்படை அதிகாரிகளிடம் இருந்து நீதி கிடைக்காது என்று முறையிட்டு இருக்கிறார். சிக்கலான வழக்கு என்பதால் இன்று கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி கொடுக்க போகும் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

கஷ்டம்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனக்கு விமானப்படை அலுவலகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்து உள்ளார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட எப்ஐஆரிலும் அந்த பெண் பட்ட கஷ்டங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தான் கடந்த செப்டம்பர் 9ம் தேதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். அதன்பின் விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.

நடவடிக்கை
ஆனால் என்னுடைய புகாரை அவர்கள் தீவிரமாக விசாரிக்கவில்லை. எனக்கு இரட்டை விரலை வைத்து பிறப்பு உறுப்பில் சோதனை செய்தனர் என்று அந்த பெண் கூறியுள்ளார். இரட்டை விரல் பரிசோதனை முறைக்கு கடும் எதிர்ப்புகள் உலகம் முழுக்க எழுந்து வருகிறது. இந்த முறையை மேற்கொள்ள கூடாது என்று 2014லேயே மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களுக்கு, பிறப்பு உறுப்பில் காயங்கள் உள்ளனவா என்று விரலை வைத்து சோதனை செய்யும் முறையாகும் இது.

வன்புணர்வு
வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் மேலும் மன ரீதியாக பாதிப்பு அடையும் வகையில் இந்த சோதனை செய்யப்படுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட அந்த பெண் விமானப்படை அதிகாரிக்கு இரட்டை விரல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த பெண் அதிகாரி கூறியுள்ள நிலையில், எனக்கு இரட்டை விரல் சோதனை செய்தவர்கள் என்னை இழிவாக நடத்தினார்கள். என்னிடம் ஏளனமாக நடந்து கொண்டனர்.

அழுத்தம்
நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று எனக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். எனக்கு சோதனை செய்தவர்கள் கூட புகாரை வாபஸ் வாங்க சொல்லி அழுத்தம் கொடுத்தனர். மன ரீதியான பாதிப்பை எனக்கு இது கொடுத்தது. அதேபோல் என்னிடம் இருந்த ஆதாரங்களை அழிக்கவும் இவர்கள் முயன்றனர். நான் விமான படையிடம் புகார் கொடுத்தும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போலீசில் புகார் தந்தேன்.

உடல்நிலை
எனக்கு உடல்நிலையை போலவே மனநிலையும் மோசமானது. மனரீதியாக பாதிக்கப்பட்டு, அச்சத்தில் ஒருநாள் இரவு அலறி துடித்து மயங்கி விழுந்தேன். என்னால் அங்கு சுவாசிக்க கூட முடியவில்லை. எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போலீசில் புகார் அளித்தேன். நான் என் புகாரில் இருந்து வாபஸ் வாங்க மாட்டேன். என் நிலைபாட்டில் உறுதியாக இருப்பேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications