கண்ணப்பனும் வைகோவும் ஒரே மேடையில்! எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தெரியுமா! சுவாரஸ்யமான பிளாஷ்பேக்!
கோவை: கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் வைகோவும், கண்ணப்பனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதோடு இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.
இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது எனக் கேட்பவர்கள் முதலில் கண்ணப்பன் பிளாஷ்பேக்கை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். காரோட்டி கண்ணப்பன் என்றழைக்கப்பட்ட மு.கண்ணப்பன் 90களில் கோவை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். இந்நிலையில் 1993ஆம் ஆண்டு வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருடன் பிரிந்து சென்ற 9 திமுக மாவட்டச் செயலாளர்களில் கண்ணப்பனும் ஒருவர்.

கண்ணப்பன் விட்டுச்சென்ற இடத்தை பொங்கலூர் பழனிசாமி நிரப்பினார். அது தனிக்கதை. இப்படியாக திமுகவில் தாம் வகித்த கோவை மாவட்டச் செயலாளர் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மதிமுகவுக்கு சென்றார். வைகோவுடன் 17 ஆண்டுகாலம் பயணித்த அவர் 2009ஆம் ஆண்டு வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் திமுகவிலேயே இணைந்துவிட்டார்.
இவரை திமுகவுக்கு வரவேற்க அவரது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாம்பாளையம் இல்லத்துக்கே அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினை அனுப்பி வைத்தார் கருணாநிதி. அந்தளவுக்கு கண்ணப்பனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார் கருணாநிதி.
இவரது பேரன் தான் திரைப்பட நடிகர் நந்தா. ஆனந்தபுரத்து வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மதிமுகவை விட்டு வெளியேறி சுமார் 14ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் வைகோவை யதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று கோவையில் ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்கு பிறகு வைகோவை பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து அவரது கரம் பற்றி நலம் விசாரித்தார் கண்ணப்பன். பதிலுக்கும் வைகோவும் கண்ணப்பனிடம் நின்று பேசி நலம் விசாரித்துவிட்டு தனது இருக்கைக்கு சென்றார். இதனை பார்த்த மேடையில் இருந்த தலைவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications