6 கேமரா.. 12 பேர்.. வால்பாறை சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை ஸ்கெட்ச்
கோவை: கோவை மாவட்டம், வால்பாறையில் 4 வயது சிறுமியை சிறுத்தை கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து சிறுத்தையை பிடித்து வேறு பகுதியில் விட கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மனித - விலங்கு மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மலை கிராமங்களிலும், அடிவார பகுதிகளிலும் வனவிலங்கு நடமாட்டம் அதிகம் இருக்கும். யானை, புலி, சிறுத்தை, கறுஞ்சிறுத்தை, காட்டு மாடு, காட்டு பன்றி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும்.

முக்கியமாக வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. அங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. வால்பாறை ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி (வயது 41) என்பவர் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி பெயர் நசீரான். இவரும் தேயிலை தோட்ட பணியாளராக இருந்து வருகிறார்.
இந்த தம்பதி கடந்த ஒரு வருடமாக ஊசி மலை எஸ்டேட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் அப்சரா கதூன் என்ற மகள் உள்ளார். நேற்று மதியம் சிறுமி அப்சரா தன் அம்மா நசீரானுடன் எஸ்டேட் பகுதியில் இருந்துள்ளார். அப்போது அங்கு திடீரென வந்த சிறுத்தை, கண் இமைக்கும் நேரத்தில் சிறுமியை வாயில் கவ்வி காட்டுக்குள் இழுத்து சென்றது.
இதைப் பார்த்து நசீரான் கூச்சலிட்டு அலறியுள்ளார். அக்கம், பக்கத்தினர் சிறுத்தையை பிடிக்க சென்றனர். ஆனால் அது காட்டுக்குள் சென்றுவிட்டது. அதுகுறித்து வனத்துறை, காவல்துறை ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது சிறுமியின் உடல் வனப்பகுதியில் சடலமாக கைப்பற்றப்பட்டது.
சுமார் 700 மீட்டர் தொலைவுக்கு சிறுமியை தூக்கி சென்று, கடித்து குதறியது தெரியவந்தது. இதுகுறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டது. சிறுத்தையை கண்காணிப்பதற்காக கேமராக்கள் அமைத்தும், தனிப்படை உருவாக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளதாக வனத்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அந்த சிறுத்தையை கண்காணிப்பதற்காக 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் தெரிந்தவுடன், அந்த பகுதிகளில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுத்தையின் கால்தடம், புதர்களை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள புதர்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. எஸ்டேட் ஊழியர்கள் புதர் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மாலை, இரவு நேரத்தில் வெளியில் வர வேண்டாம். முக்கியமாக குழந்தைகளை தனியாக விடாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றனர்.












Click it and Unblock the Notifications