‘இன்னும் எத்தனை நாள் ஒரே பல்லவியை பாடுவீர்கள்’.. அன்பில் மகேஷ்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
கோவை: தேசியளவில் பாஜகவுக்கு எதிரான தீவிர அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சியாக திமுக இருக்கிறது. இதன் காரணமாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்காமல் இருக்கிறது என்று திமுக கூறி வருகிறது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திமுக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு கல்விக்கான நிதி கொடுக்கவில்லை மாணவர் செல்வங்களை வஞ்சிக்கின்றனர் என்று கூறுகிறார். இப்படி நீண்ட நாட்களாக கூறுவருகிறார்கள். இவர்கள் கேட்பதும், மத்திய அரசு அதற்கான பதிலை சொல்வதும் புதிது இல்லை.

ஆசிரியர் பற்றாக்குறை
இதை நாடாளுமன்றத்திலும் கூறியுள்ளோம். மாநில அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகளை மத்திய அரசாங்கம் கேட்டால், அதை எந்த வகையில் எடுத்து வைக்க வேண்டுமோ எடுத்து வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியலுக்காக பேசுவது சரி இல்லை. பள்ளிக் கல்வித் துறை இன்று எத்தனையோ பள்ளிகளில், நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். பள்ளி வகுப்புகளில் மரத்தடியில் படிக்கின்ற சூழலையும், கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கின்ற சூழலையும் என்னுடைய தொகுதியிலும் நிலவுகிறது.
எவ்வளவோ பள்ளிகளில் ஆசிரியர்கள் கிடையாது. ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு எங்களுக்கு உதவ முடியுமா என்று அமைச்சரிடம் கேட்கிறேன். இன்று நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் மிகவும் கடுமையாக உள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறையில் மாணவர்களுக்கு சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் கிடையாது. ஆசிரியர்களுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் என்ன ஆனது.
ரசீது எங்கே
திமுக ஆட்சி நான்கரை ஆண்டுகளாகியும் கூட, பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த கேள்விகள் எல்லாம் எழுப்பும் போது, மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்ற ஒற்றை வார்த்தையில் சமாளிக்கிறார்கள். அது உண்மை அல்ல. இது இல்லாமல், மத்திய அரசு தமிழகத்திற்காக ஏராளமான நிதியை ஒதுக்குகிறார். இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த நிதியை எல்லாம் எப்படி நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என திமுக அரசை கேட்கிறேன். பயன்படுத்திய நிதிக்கு யுட்டிலைசேஷன் சான்றிதழ் கொடுக்கவில்லை. உங்களுக்கு கொடுக்கின்ற பணத்திற்கு ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசு கொடுக்கின்ற கோடிக் கணக்கான நிதிகளை, பயன்படுத்தப்பட்டதற்கான ரசீதை தமிழக அரசு கொடுக்கவில்லை. இதனால் மத்திய அரசினுடைய நிர்வாகத்தின் இருக்கின்றவர்கள் ரசீதை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்த கட்ட நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
அதே பல்லவி
இதை மறைத்துக் கொண்டு மத்திய அரசை வஞ்சிக்கிறது என்று வழக்கமான பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் கூறியது எந்த உண்மையும் கிடையாது. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கேட்டால், நாங்கள் நடத்துகிறோம், நீதிமன்றம் தடை விதிப்பதாகவும் பதிலைக் கூறுகிறார்கள். சட்ட ஆலோசகர்களை வைத்து நீதிமன்றத்தில் தகுந்த முறையில் அந்த வழக்கை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
ஆண்டு கணக்குகளாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று அந்த காரணத்தை ஒரு அரசு எவ்வளவு நாட்கள் அதையே கூற முடியும். அரசுக்கு மொத்தமாக ஐந்தாண்டுகள் நான் ஆட்சிக்காலம். அந்த ஐந்தாண்டுக்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா என்று பார்க்க வேண்டும். நீதிமன்றத்தை எத்தனை நாள் காரணம் காட்டுவீர்கள்." என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications