‘எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரம்’ - கோவை மாணவிக்காக கலங்கிய துணை ஜனாதிபதி
கோவை: கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த தனியார் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வெளியூரைச் சேர்ந்த 20 வயதான அவர், கோவை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ஒண்டிப்புதூரில் உள்ள 25 வயது இளைஞர் அவரின் ஆண் நண்பராக உள்ளார்.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் அருகில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அவர்கள் சிசிடிவி, செல்போன் டவர், குற்றவாளிகள் சரித்திர பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், குணா, கார்த்தி ஆகிய 3 இளைஞர்களை வெள்ளகிணர் பகுதியில் நேற்று நள்ளிரவு காவல்துறையினர் துப்பாக்கி மூலம் காலில் சுட்டு பிடித்தனர்.
துணை ஜனாதிபதி வருகை
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்தன. மாணவிக்கு ஆதரவாகவும், காவல்துறை அரசைக் கண்டித்தும் கோவையில் பாஜக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. அதேபோல இன்று அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கோவையில் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் கோயில் விளக்கு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மாலை கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஒன்னிபாளையம் கருப்பராயன் கோயில் விளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான தாய்மார்களுடன் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறேன்.
நடக்க கூடாத கொடூரம்
தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான். கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாட்டில் எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல்துறையின் பொறுப்பாகும்.
காவல்துறையினர் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட சகோதரிக்கும், அவரது பெற்றோருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாதது தான். ஆனாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது, வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications