அண்ணாமலை பக்கத்துல நிற்கிறாரே.. கோவையில் மும்பை எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன்.. யார் இவர்?
கோவை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தான் போட்டியிடும் கோவை தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை. அண்ணாமலை நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டபோது அவருடன் மும்பையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும் உடன் இருந்தார். யார் அவர்?
மும்பை எம்.எல்.ஏ: மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பாக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமம். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகக் கூறி, ஏஜென்ட் ஒருவர், தமிழ்ச்செல்வனை மும்பைக்கு அழைத்துச் சென்று, விமான நிலையத்தில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

துபாய்க்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு வந்து ஏமாந்து போய் மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவதை தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை. மும்பையிலேயே தங்கிவிட்டார். தமிழ்ச்செல்வன் மும்பை ரயில் நிலையங்களில் கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து, தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு உதவத் தொடங்கினார்.
கேப்டன் தமிழ்ச்செல்வன்: மும்பையின் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது காயமடைந்து உயிருக்கு போராடிய 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்த இவரது சேவைக்காக, மாநில ஆளுநர் பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளார். இவரது உதவி செய்யும் குணத்துக்காக மும்பை வாழ் தமிழர்கள் இவரை கேப்டன்' தமிழ்ச்செல்வன் என்று அழைக்கிறார்கள்.
உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர் என்ற பதவியில் இருந்த தமிழ்செல்வன், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். பாஜகவில் இணைந்த தமிழ்ச்செல்வனுக்கு 2014 சட்டசபை தேர்தலில் சயான் - கோலிவாடா தொகுதி சீட் வழங்கியது பாஜக. அதில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் தமிழ்ச்செல்வன்.
தமிழ்நாட்டில் தமிழ்ச்செல்வன் பிரச்சாரம்: மீண்டும் 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சயான் - கோலிவாடா தொகுதியில் வென்று பாஜக எம்.எல்.ஏவாக இருக்கிறார் தமிழ்ச்செல்வன். மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக இருக்கும் ஒரே தமிழர் தமிழ்ச்செல்வன் தான்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதற்காக வந்துள்ளார் தமிழ்ச்செல்வன். அந்தவகையில் கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார்.
அண்ணாமலை உடன்: நேற்று இரவு கோவை சிங்காநல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், அவருடன் திறந்தவெளி பிரச்சார வேனில் அண்ணாமலையுடன் நின்றிருந்தார் தமிழ்ச்செல்வன். தான் மும்பையில் இருந்து அண்ணாமலைக்காக ஓட்டு கேட்டு வந்திருப்பதாக அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications