கோவையில் வரலாறு படைக்குமா திமுக? வெற்றிபெற்றால் முதல்முறை மேயர் பதவி! எகிரும் டென்ஷன்!
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கோவையில் ஆளுங்கட்சியான திமுக புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
இன்று திமுக அதிக வார்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் கோவை மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பு வரலாற்றில் முதல்முறையாக திமுகவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் களப்பணி தங்களை கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கையில் கோவை திமுகவினர் வாக்கு எண்ணிக்கை நாளான இன்று உற்சாகமாக இருக்கின்றனர்.

கோவை மாநகராட்சி
கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற முதல் கோவை மாநகராட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.ஜி. என்றழைக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் கோவையின் முதல் மேயராக தேர்வானார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மூப்பனாருக்காக கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இவருக்கு அடுத்ததாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதுடன் அக்கட்சியை சேர்ந்த மலரவன் கோவை மாநகராட்சியின் 2-வது மேயரானார்.

பூக்கடை நடத்தியவர்
சாதாரண பூக்கடை நடத்தி வந்த மலரவனுக்கு மேயர் பதவியை கொடுத்து சொந்தக் கட்சியினரை மட்டுமல்லாமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் திக்குமுக்காட வைத்தார் ஜெயலலிதா. இதையடுத்து 2006-ம் ஆண்டு நடைபெற்ற கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றிபெற்றதால் அப்போது திமுகவுக்கு கோவை மேயர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடுத்த குடைச்சலால் அந்த முறையும் கோவை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தார் கருணாநிதி.

அதிரடி மாற்றம்
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பருமான நீலகிரி பிரபு (இவர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்) மூலம் காலனி வெங்கடாசலம் கோவை மாநகராட்சியின் 3-வது மேயரானார். அவரைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் மீண்டும் அதிமுக அமோக வெற்றிபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை கோவை மாநகராட்சியின் 4-வது மேயராக்கினார் ஜெயலலிதா. பிறகு அவரது செயல்பாடுகளின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக 2014-ம் ஆண்டே மேயர் பதவியை அவரை ராஜினாமா செய்ய வைத்து அதிமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார் என்பவரை கோவை மாநகராட்சியின் 5-வது மேயராக்கினார் ஜெயலலிதா.

வரலாறு படைக்குமா?
பிறகு 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடைபெற்றிருக்கிறது. கோவை மாநகராட்சி மேயர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தும் அதனைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக தலைமை, இந்தமுறை அது போல் செய்யக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறது. இதனால் இன்று கோவை மாநகராட்சியில் திமுக அதிக வார்டுகளில் வெற்றுபெற்றால் அக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் கோவையின் முதல் பெண் மேயராகவும், திமுகவின் முதல் கோவை மேயராகவும் வரலாறு படைப்பார்












Click it and Unblock the Notifications