தமிழர்கள் நிலம் திரும்ப தரப்படும்.. அதிபர் வாக்குறுதி.. களைகட்டிய இலங்கை நாடாளுமன்ற தேர்தல்
கொழும்பு: இலங்கையில் நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயக்கவால் சுதந்திரமாக செயல்பட முடியும். இதனால் இந்த தேர்தல் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உள்நாட்டு போரின்போது ஈழத்தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்ப அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று அதிபர் அனுர குமார திசநாயக்க முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் சிட்டிங் அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக களமிறங்கினார். அதேபோல் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திசநாயக, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசாவும் போட்டியிட்டனர்.

மேலும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பிலும், ஈழத்தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் உள்பட 38 பேர் போட்டியிட்டனர். இதில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச சேர்ந்த அனுர குமார திசாநாயக வெற்றி பெற்று அதிபரானார். இவரும், இவரது கட்சியும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள்.
அதன்பிறகு ஹரிணி அமரசூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்தினார். இதையடுத்து தான் தற்போது இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை நாடாளுமன்ற பதவிக் காலம் முடிய 10 மாதங்கள் இருந்தது. ஆனால் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தேர்தலை அறிவித்தார். இலங்கையை பொறுத்தமட்டில் மொத்தம் 225 நாடாளுமன்ற எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்றால் 113 உறுப்பினர்கள் வேண்டும்.
இந்த 225 உறுப்பினர்களில் 196 பேர் மட்டும் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மற்ற 29 இடங்களுக்கான எம்பிக்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதாவது நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் செய்ப்படுவார்கள். தனி மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும்.
ஆனால் தற்போது அனுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 4 எம்பிக்கள் மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே புதிய மசோதா, சட்டத்திருத்தம் கொண்டு வர முடியும். இதனால் இந்த நாடாளுமன்ற தேர்தலி்ல அனர குமார திசநாயக கட்சி வெற்றி பெற வேண்டியகட்டாயத்தில் உள்ளது. இந்த தேர்தலில் அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, சஜித பிரேமதாசவின் எஸ்ஜேபி, ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்களை நிறுத்தி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் இலங்கை மக்களின் ஓட்டுகளை கவர அதிபர் அனுர குமார திசநாயக்க புதிய அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஈழத்தமிழர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்பை செய்துள்ளார். அதாவது உள்நாட்டு போரை காரணம் காட்டிதமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள தூய் அந்தோணி சர்ச் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசநாயகே கூறுகையில், ‛‛உங்கள் பகுதியில் உங்களை உங்களுக்கான தலைவர் வழிநட்தத வேண்டும் என்பதை நான் உறுதி செய்வேன். இலங்கை அதிபர் தேர்தலில் யாழப்பாணத்தில் எனக்கு 27 ஆயிரம் பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இதற்கு காரணம் எங்களின் வாக்குறுதிகள் பற்றி உங்களிடம் எடுத்து கூறி பிரசாரம் செய்யாதது தான். ஆனாலும், இப்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்து நிறையப்பேர் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளதற்கு நன்றி.
நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்துவோம். உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இலங்கை அரசு நிறுவனங்களால் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலம் அனைத்தும் அவரவருக்கே திரும்ப ஒப்படைக்கப்படும்.இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்குப பகுதியில் உள்ள கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர். கடல் வளங்களை சுரண்டுவது நடக்காமல் இருப்பதையும், இலங்கை மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதையும் அரசு உறுதி செய்யும்’’ என்றார்.
முன்னதாக அதிபர் தேர்தலையொட்டி சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் அந்த சமயத்தில் அனுர குமார திசநாயக்கவின் இன்டோர் மீட்டிங்கில் நிறைய மக்கள் கூடவில்லை. அதனை குறிப்பிட்டு தான் அனுர குமார திசநாயக்க நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசி உள்ளார். அதேபோல் இலங்கையின் உள்நாட்டின் போரால் ஈழத்தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
அந்த போர் முடிவடைந்த பிறகும் கூட அரசின் செயல்பாடுகளால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஈழத்தமிழர்களின் நிலங்களை அகழ்வாராய்ச்சி மற்றுமு் வனத்துறையினர் பறித்து கொண்டனர். இந்த நிலத்தை திரும்ப வழங்க ஈழத்தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் அனுர குமார திசநாயக்கே இந்த அறிவிப்பை செய்துள்ளார். இது இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இலங்கை தமிழர்களின் ஓட்டுகள் யாருக்கு கிடைக்கும்? என்பதை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து இருந்தது. இதில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஸ்எல்பிபி எனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 105 இடங்களை வென்றது. இது ராஜபக்சேவின் கட்சியாகும். இதையடுத்து மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி வகித்தார். 2020 தேர்தலில் அனுர குமார திசநாயக கட்சிக்கு வெறும் 5 எம்பிக்கள் மட்டுமே கிடைத்தன. அதன்பிறகு 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் வன்முறை வெடித்தது. பொருளாதார நெருக்கடி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் போராட்டம் உள்ளிட்டவற்றால் இலங்கையில் தீக்கிரையானது.
இதையடுத்து மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்து வெளிநாட்டுக்கு தப்பினார். இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்படார். தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து புதிய அதிபராக அனுர குமார திசநாயக தேர்வாகி உள்ள நிலையில் நவம்பர் 14ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications