என் உயிருக்கு ஆபத்து, ஏதாவது ஆனால் அதிபரே பொறுப்பு.. இலங்கை அமைச்சர் பகீர்.. பின்னாடியே வந்த ஆக்ஷன்
கொழும்பு: தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படுவதாகவும் எனது உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதிபர் ரணில் விகரமசிங்கேவே பொறுப்பு என்று பேசிய ரோஷன் ரணசிங்கே விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கத்துக்குட்டி அணி போன விளையாடிய இலங்கை அணிக்கு சொந்த நாடு திரும்பியதும் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியம் மொத்தமாக கலைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரோஷன் ரணசிங்கேவே எடுத்தார்.

பின்னர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரணதுங்கே தலைமையில் தற்காலிக குழு ஒன்றையும் அமைத்து அவர் உத்தரவிட்டு இருந்தார். 7 பேர் கொண்ட இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாரியத்தின் உறுப்பினரான ஷம்மி சில்வா வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து வாரியம் கலைக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக கோர்ட் நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த ரோஷன் ரணசிங்கேவை ரணில் விக்ரமசிங்கே கண்டித்ததாக தகவல் வெளியானது.
மேலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் விளையாட்டுத்துறை கொண்டு வரப்படும் என எச்சரித்துள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த ரோஷன் ரணசிங்கே, இலங்கை அதிபருக்கு எதிராக பேட்டி கொடுத்தார். இது தொடர்பாக ரோஷண் ரணசிங்கே கூறும் போது, "கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் இன்றோ நாளையோ கொலை செய்யப்படலாம். எனக்கு எதாவது நடந்தால் அதிபரும் அவரது ஆலோசகருமான சகலா ரத்னநாயகேதான் பொறுப்பு" என்று கூறியிருந்தார்.
ரணசிங்கேவின் இந்த குற்றச்சாட்டு இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரணசிங்கேவின் இந்த பேட்டி வெளியான சில மணி நேரத்தில் அவரது விளையாட்டுத்துறை அமைச்சர் பறிக்கப்பட்டது. முன்னதாக கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் வரி முறைகேடு செய்தாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க்கப்பட்டதும் விளையாட்டுத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வந்த ரணசிங்கே அங்கிருந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரணசிங்கே, விளையாட்டுத்துறையில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications