இலங்கை அதிபர் தேர்தல் தோல்வி எதிரொலி.. அரசியலுக்கு குட்பை சொல்லும் ரணில் விக்கிரமசிங்க! பரபர
கொழும்பு: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். இதற்கிடையே ரணில் விக்கிரமசிங் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவியது.

இலங்கை அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் 50%க்கு மேல் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 55.89% வாக்குகளை பெற்று அநுர குமார திசாநாயக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மூலம் இலங்கையின் 10வது அதிபராக அநுர குமார திசாநாயக்க தேர்வானார்.
இந்தத் தேர்தலில் இருவரைத் தவிர்த்து ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்டார். இருப்பினும், 17% வாக்குகளை மட்டுமே பெற்ற அவர் முதல் சுற்றிலேயே வெளியேறினார். இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார குழப்பம் ஏற்பட்ட நிலையில், அப்போது அங்கு மிகவும் இக்கட்டான சூழல் நிலவியது. அந்த நேரத்தில் துணிச்சலாக அதிபர் பதவியை ஏற்று வழிநடத்தியவர். இதற்கிடையே அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க: அங்கு அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வென்ற நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வேண்டாம் என்று ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த உடன் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து விலகினார். அப்போது அவர் சில உணர்ச்சிகரமான கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "அநுர குமார திசாநாயக்க, நாம் இருவரும் நேசிக்கும் இலங்கை என்ற இந்த குழந்தையை இப்போது உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்த குழந்தையை அநுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த குழந்தையை நான் பாதுகாத்ததை விட உங்களால் பாதுகாப்பாகக் கொண்டு சென்று கரையேற்ற முடியும் என நம்புகிறேன்.
சேவை செய்வேன்: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கே பற்றாக்குறை இருந்தது. அப்போது நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. இப்போது சரியான பாதையில் நாம் செல்கிறோம். நிலைமை மெல்லச் சீராகி வருகிறது. மக்களைப் பசி மற்றும் துக்கத்திலிருந்து காப்பாற்றி வருகிறோம். புதிய அதிபர் இந்த பயணத்தை முன்கூட்டி எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறோம்.
எனது வாழ்நாள் முழுவதும் அதிகாரம், பதவி இருந்தாலும் சரி, அதிகாரம் இல்லாவிட்டாலும் சரி, எனது தாய்நாட்டிற்குச் சேவை செய்வதில் நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேர்தல்: இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்போது இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார். அங்கு விரைவில் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications