இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து ராஜினாமாவா? பிரதமர் அலுவலகம் விளக்கம்
கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே, அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். ராஜபக்சே குடும்பத்தினரே அமைச்சரவை மற்றும் அரசாங்கப் பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ராஜபக்சே குடும்பத்தில் மோதல்?
இதனால் ராஜபக்சே குடும்பத்தில் யார் பெரியவர் என்கிற அதிகார மோதல் கடந்த சில மாதங்களாக வெடித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டன. இதன் உச்சகட்டமாக மகிந்த ராஜபக்சேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு பசில் ராஜபக்சேவை பிரதமராக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

திருப்பதியில் வழிபாடு
சொந்த குடும்பத்தினரின் துரோகத்தால் வெறுத்துப் போய்தான் அண்மையில் மகிந்த ராஜபக்சே, திருப்பதிக்கு வருகை தந்து வழிபாடு நடத்தியதாகவும் கூறப்பட்டது. இன்னொரு பக்கம் மகிந்த ராஜபக்சேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி அவரை கட்டாய ஓய்வுக்கு அனுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது.

அரசியலில் இருந்து ஓய்வா?
இதனையடுத்து மகிந்த ராஜபக்சே உடல்நலனை காரணம் காட்டி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறக் கூடும் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் இதனை மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்திருந்தார். தாம் அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வு பெறப் போவது இல்லை எனவும் மகிந்த ராஜபக்சே விளக்கம் அளித்திருந்தார்.

பிரதமர் அலுவலகம் மறுப்பு
இந்நிலையில் இலங்கை பிரதமர் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னரும் இதேபோல் செய்திகள் வெளிவந்தது. இத்தகைய செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications