இலங்கை: தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே- கோத்தபாய கையெழுத்துடன் சிறப்பு கெஜட் அறிவிப்பு!
கொழும்பு: இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கோத்தபாய ராஜபக்சேவின் கையெழுத்துடனான சிறப்பு கெஜட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள கோத்தபாய ராஜபக்சே சிங்கப்பூர் சென்று பின்னர் துபாயில் தஞ்சமடைய உள்ளார்.

இலங்கை பதற்றம்
கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்ப உதவியதாக இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக தலைநகர் கொழும்பில் உக்கிரமான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் பிரதமர் அலுவலகத்தை போராட்டக் குழு கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி உள்ளனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக ஜனாதிபதியாக ரணில்
இப்பதற்றமான சூழ்நிலைகளுக்கு நடுவே, ஜனாதிபதி வெளிநாடு சென்றுவிட்டதால் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்று இருப்பதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா இன்று பிற்பகல் தெரிவித்திருந்தார். இலங்கை அரசியலமைப்பின் 37-வது பிரிவின் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் மஹிந்த யாப்பா.

சஜித் எதிர்ப்பு
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், ஜனாதிபதியால் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்படாமல் அல்லது சபாநாயகருடன் கலந்தாலோசிக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவால் பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது. எனவே பிரதமரால் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது. அவரால் ஊரடங்கு உத்தரவையோ, அவசரகால நிலையையோ அறிவிக்க முடியாது என்றார்.

கோத்தபாய கையெழுத்துடன் கெஜட் அறிவிப்பு
இந்நிலையில் இன்று இரவு இலங்கை அரசாங்கம் ஒரு சிறப்பு கெஜட் அறிவிப்பை வெளியிட்டது. பதவி விலக உள்ள கோத்தபாய ராஜபக்சேவின் கையெழுத்துடனான அந்த சிறப்பு கெஜட் அறிவிப்பில், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கான அனைத்து பொறுப்புகளும் கடமைகளும் தற்காலிக ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையின் புதிய பிரதமராக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இணக்கமான ஒருவரை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பாவை, தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications