அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட கடும் தட்டுப்பாடு! டீசலும் சில வாரங்களில் காலி? தத்தளிக்கும் இலங்கை
கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எரிபொருளுக்கு மிகப் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உச்சத்தில் உள்ளது.
இலங்கை நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார பாதிப்பிற்கு கொரோனா பெருந்தொற்று தொடங்கிய கெமிக்கல் உரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது வரை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

எப்போது சீராகும்
இலங்கை நாட்டில் மிக மோசமான மின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இப்போது இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கல்லூரி மாணவர்களும் கூட அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்து உள்ளதால் அங்கு நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்தியா உதவி
இலங்கை நாட்டில் அந்நிய செலாவணியும் மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மோசமான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசலை பெறக் கூட மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தான், அந்நாட்டிற்கு உதவும் வகையில் இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை அனுப்பி இருந்தது.

டீசல் பற்றாக்குறை
இருந்த போதிலும், இது நிலைமையை மேம்படுத்தத் துளியும் உதவவில்லை. இலங்கையில் இதே நிலை நீடித்தால் இந்த மாத இறுதிக்குள் டீசல் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், அங்கு மின்சாரம் எரிவாயு, உணவு ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டீசல் பற்றாக்குறை அங்கு மிக மோசமாக உள்ளது.

3 முறை
கடந்த ஏப்ரல் 15, 18 மற்றும் 23ஆம் தேதிகளில் இந்தியா 3 முறை டீசலை அனுப்பி உள்ளது. இந்தியாவிடம் இதுவரை இலங்கை புதிதாக உதவி எதுவும் கோராத நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்தியா கூடுதலாக டீசலை அனுப்பவில்லை என்றால் இன்னும் சில வாரங்களில் டீசல் காலியாவது உறுதி என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறை காரணமாகத் தனிநபர் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

மின்வெட்டு
இப்போது பொது போக்குவரத்திற்குக் கூட இல்லாத அளவுக்கு டீசல் பற்றாக்குறை உச்சத்தில் உள்ளது. இது மட்டுமின்றி டீசல் பற்றாக்குறையால் ஒரு சில அனல் மின் நிலையங்களும் மூடப்பட்டதால் ஏற்கனவே அங்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியாததால், அங்குள்ள சுத்திகரிப்பு ஆலையும் மூடப்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ பொருட்கள்
அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. குறிப்பாக முக்கிய மருத்துவ பொருட்களுக்குக் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கமான ஆபத்தில்லாத அறுவை சிகிச்சைகள் எல்லாம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பயன்படுத்த அந்நாட்டு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இது அங்கு நிலவும் தீவிர தன்மையை உணர்த்தும் வகையில் உள்ளது.











Click it and Unblock the Notifications