மோசமாகும் இலங்கை நிலை.. 6வது மாதமாக உச்சம் தொட்ட பண வீக்கம்.. உணவு பொருள் விலை உயர்வு
கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கையில் தொடர்ந்து 6 வது மாதமாக பண வீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தவறான பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

பணமின்றி தவிக்கும் இலங்கை
மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் இலங்கையிடம் கையிருப்பில் உள்ள தொகை வெறும் 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இதன் மூலம் இலங்கையால் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாது.

6 மாத தொடர் பணவீக்கம்
இந்த நிலையில் இலங்கையில் 6 வது மாதமாக பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. மார்ச் மாதத்தில் தேசிய வாடிக்கையாளர் விலை குறியீடு 21.5% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விலை குறியீடு என்பது 5.1% ஆக இருந்தது. அதேபோல் இலங்கையில் உணவு வீக்கமும் 29.5% ஆக உயர்ந்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனம் டீசல் விலையை 64.2% அதிகரித்துள்ளது.

சர்வதேச நிதியத்தை நம்பும் இலங்கை
இதனால் சர்வதேச நிதியத்திம் உடனடியாக கடன் வழங்க உதவ வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், தெற்காசிய நாடுகளிடம் பெறப்பட்ட 51 பில்லியன் டாலர் கடன் நிலையற்றதாக உள்ளதால் ஐ.எம்.எப். கடன் வழங்க தயக்கம் காட்டுகிறது. இலங்கை அரசு தங்கள் நாட்டின் கடனை சீராக்கி பிரச்சனையை சரிசெய்த பிறகு கடன் வாங்குமாறு ஐ.எம்.எப். அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video

போராட்டமும் துப்பாக்கிச்சூடும்
இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் உட்பட பலதரப்பட்ட மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications