பலாத்கார குற்றவாளி நித்தியானந்தா தஞ்சம் கோரினாரா? இலங்கை ஜனாதிபதி ரணில் ஆபீஸ் சொன்ன பதில் இதுதான்!
கொழும்பு: இந்தியாவில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா என்ற போலி சாமியார் தமக்கு தஞ்சம் கோரி இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியதாக வெளியான செய்திகள் குறித்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலையில் நடைபாதை சாமியார்களில் ஒருவராக இருந்தவர் நித்தியானந்தா. செல்வந்தர்களால் திடீர் செல்வாக்கு பெற்று ஊடகங்களில் ஆன்மீகத் தொடர் எழுதினார். இதனையடுத்து நித்தியானந்தா சாமியாரை ஏராளமானோர் தேடி வரத் தொடங்கினர்.

சர்சசையில் நித்தியானந்தா
இதனால் நித்தியானந்தாவின் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது. தமிழகத்தைப் போல பெங்களூரு, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நித்தியானந்தாவுக்கு கிளைகள் உருவாகின.இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கைலாசா பரபரப்பு
இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா மீது ஏராளமான புகார்களும் வழக்குகளும் வரிசைகட்டத் தொடங்கின. நித்தியானந்தாவுக்கு எதிரான பிடி இறுகத் தொடங்கியதால் தப்பி ஓடிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிராக விசாரணை அமைப்புகள் நோட்டீஸ் வெளியிட்டன. அப்போதுதான் தாம் கைலாசா என்ற தனிநாட்டை தொடங்கிவிட்டதாக நித்தியானந்தா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் சமூக ஊடகங்களில் இடைவிடாமல் தம்முடைய சோ கால்ட் ஆன்மீக பிரசாரத்தை முன்னெடுத்தும் வந்தார்.

மரணப் படுக்கையில்..
தமிழ்நாட்டின் பல பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்து சமூகவலைதளங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டார். அண்மையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடப்பதாக நித்தியானந்தாவே செய்திகளை வெளியிட்டார். பின்னர்தாமே நலமடைந்துவிட்டதாகவும் 2.0 வெர்சன் எனவும் காமெடி செய்து கொண்டிருந்தார்.

இலங்கையில் தஞ்சமா?
தற்போது தமக்கு உடல்நலன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது; ஆகையால் இலங்கை அரசாங்கம், சிகிச்சைக்காக இடம் தந்து உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே அலுவலகத்தை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொன்டு கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம், நித்தியானந்தா சார்பில் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. ஒருநபர் தஞ்சமடையும் கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும்; சாதாரணமான தபாலில் அனுப்பிவிட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications