பிரபாகரன் இருப்பது நரகத்தில்..நெடுமாறன் நீங்களும் போறீங்களா? இலங்கை மாஜி அமைச்சர் சரத் வீரசேகர
பிரபாகரன் நரகத்தில்தான் இருக்கிறார் என காட்டமாக மறுப்பு சொல்கிறார் இலங்கை மாஜி அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி.
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இப்போது நரகத்தில் இருக்கிறார்; தமிழ்நாட்டு அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் நரகத்துக்கு போய் பிரபாகரனை அழைத்து வரலாம் என காட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார் இலங்கை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எம்.பி.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக இலங்கை எம்பியான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியதாவது: பிரபாகரன் இப்போது நரகத்தில்தான் இருக்கிறார். பல லட்சக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தவர் பிரபாகரன். அதனால்தான் நரகத்தில் இருக்கிறார் பிரபாகரன்.
பிரபாகரனை அழைத்துவர விரும்பினார் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும். அங்குபோய்தான் பிரபாகரனை பழ.நெடுமாறன் அழைத்து வர வேண்டும். இவ்வாறு சரத் வீரசேகர கூறினார்.
ஏற்கனவே இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். பழ.நெடுமாறனுக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் பிரபாகரனை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டி இருக்கிறது என கூறியிருந்தார்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வைகோ, திருச்சி வேலுசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோரும் பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு குறித்து மாறுபாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தஞ்சாவூரில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழீழ விடுதலைக்கான திட்டத்தையும் பிரபாகரன் அறிவிப்பார் என்பதுடன் ஒரு பக்க அறிக்கை ஒன்றையும் நெடுமாறன் வெளியிட்டார். அந்த அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார் என நெடுமாறன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications