இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா- சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா இன்று அறிவித்தார்.
Recommended Video
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீரமைக்காததால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல மாதங்களாக தொடரும் மக்கள் கிளர்ச்சியால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவருக்கு பதில் இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

ஆனாலும் பொருளாதார நிலைமை மேம்பாடு அடையவில்லை. இதனால் மக்கள் போராட்டமும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மக்கள், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். இதனால் ஜனாதிபதி மாளிகையைவிட்டு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடினார். அத்துடன் தாம் ஜூலை 13-ந் தேதிக்குள் தாம் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.
இன்னொரு பக்கம், இலங்கையைவிட்டு மாலத்தீவுக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பவில்லை. அதேநேரத்தில் தற்காலிக ஜனாதிபதியாக தாம் பதவியேற்பதாக ரணில் விக்கிரமசிங்கே, சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு தெரிவித்திருந்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலகும் முன்பாக ரணில் விக்கிரமசிங்கே, தமது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. அங்கிருந்து இ மெயில் மூலமாக தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு கோத்தபாய அனுப்பினார். இருப்பினும் இந்த கடிதத்தின் உண்மையை ஆராய்ந்து இன்று தாம் அறிவிப்பேன் என கூறியிருந்தார் சபாநாயகர். இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்சே அனுப்பிய கடிதம் உண்மைதான்; அந்த ராஜினாமா கடிதத்தை தாம் ஏற்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜினாமா செய்துவிட்டதால் புதிய ஜனாதிபதி அடுத்த 7 நாட்களுக்குள் நியமனம் செய்யபப்டுவார் எனவும் மஹிந்த யாப்பா தெரிவித்தார்.
மேலும் நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படும் வரை அரசியல் சாசனப்படி ஜனாதிபதிக்கான அதிகாரங்களை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல்படுத்துவார்; அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் சபாநாயர் மஹிந்த யாப்பா.












Click it and Unblock the Notifications