எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்..கோத்தபயவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..இலங்கையில் அனைத்து கட்சி ஆட்சி?
கொழும்பு : இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்குமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ஆளும் கூட்டணிக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவால் நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

மக்கள் போராட்டம்
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளதால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே வியாழன் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக அவர் பதவி விலகக் கோரி போராடிய நிலையில் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

அவசரநிலை பிரகடனம்
இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சஷவின் இல்லத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டணி அரசாங்கம்
மேலும் திங்கள் வரை நாட்டில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்குமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ஆளும் கூட்டணிக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேன இந்த கோரிக்கையை முன்மொழிந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்த முடிவுதான் சிறந்தது என்ற கோரிக்கையும் அங்கு வலுத்துள்ளது.

இலங்கை சுதந்திர கட்சி
இந்த கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்தால் சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறுமா? என்பது குறித்து தீர்மானம் எடுக்குமாறு கட்சித் தலைவர்களிடம் தெரிவிக்க உள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும், இணை மந்திரியுமான தயாசிறி ஜெயசேகரா கூறினார். முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் கோத்தபய ராஜபக்ச அரசுக்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications