ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.. இலங்கை தேர்தல் நடைமுறை எப்படி? புதுசா இருக்கே!
கொழும்பு: இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவிற்கு வித்தியாசமான முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. ராஜபக்சே கட்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட வரலாறு காணாத வன்முறை, போராட்டத்தை அடுத்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ரனில் சிங்க விக்ரமசிங்கே இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது இலங்கை அதிபரின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை வாக்குப்பதிவில் புதிய நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒரு வாக்காளர் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்.
இதில் 50 சதவீதத்துக்கு மேல் பெரும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒரு வேளை யாருக்கும் 50 சதவிகிதம் கிடைக்கா விட்டால் அதிக வாக்குகளை பெற்ற இரண்டு வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கான வாக்குகள் எண்ணப்படும். இதில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இலங்கை தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதில் தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடுகிறார். இதேபோன்று இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரமதேசா போட்டியிடுகிறார். இதேபோல் என்பிபி எனும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் அனுரகுமார திஸாநாயக்காவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பிஎஸ்ஏ எனும் போபகே மக்கள் போராட்ட கூட்டணி சார்பில் அதிபர் வேட்பாளராக நுவான் போபகேவும் களமிறங்கி உள்ளார். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13,134 ஓட்டுச்சாவடிகளில், 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நாளைக்குள் தேர்தல் முடிவு தெரிந்துவிடும் என்பதால் இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது நாளை தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications