"தனியா வரியா?".. கணவரின் இறப்பு சான்றிதழில் திருத்தம் கோரிய பெண்.. தனியாக அழைத்த விஏஓ
கடலூர்: பண்ருட்டி அருகே தனது கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை திருத்தம் செய்ய அணுகிய பெண்ணை தனியாக வருமாறு விஏஓ ஒருவர் அழைத்துள்ளார்.
இது தொடர்பான செல்போன் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணுக்கு ஆதரவாக குரலும் மேலெழுந்துள்ளது.

சான்றிதழில் திருத்தம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள உறையூர் கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவரது கணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கையில் இறப்பு சான்றிதழை சரிபார்க்கையில் அதில் பிழை இருந்துள்ளது. எனவே திருத்தம் மேற்கொள்ள அவர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) வெங்கடாச்சலத்தை அணுகியுள்ளார். ஆனால் இந்த பணியை விஏஓ தொடர்ந்து கிடப்பில் போட்டுள்ளார்.

தனியாக வரவேண்டும்
ஒரு வழியாக விஏஓ-வின் தொலைப்பேசி எண்ணை பெற்ற பெரியநாயகி அவரிடம் திருத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மழுப்பலாக பதிலளித்த விஏஓ வெங்கடாச்சலம், பெரியநாயகியை வீட்டிற்கு வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தன்னால் தனியாக வர முடியாது என்றும் தனது சகோதரர் உடன் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு வெங்கடாச்சலம் மறுப்பு தெரிவித்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனில் தனியாகதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடவடிக்கை வேண்டும்
தற்போது இது தொடர்பான ஆடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோவை ஆதராமாக கொண்டு விஏஓ வெங்கடாச்சலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். வெங்கடாச்சலம் மீது இது போன்ற ஆபாச பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே பலமுறை வந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இம்மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறையும் அவ்வப்போது கூறி வருகிறது.

தமிழக நிலைமை
பெண்களை போகப் பொருளாக பார்ப்பதுதான் இந்த மாதிரியான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்களை போக பொருளாக காட்சிப்படுத்தும் விளம்பரங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே ஆண்கள் மத்தியில் உளவியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களாக வடமாநிலங்களே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே இதுபோன்று நிகழும் பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications