இதுதான் கடலூர்.. தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த ஆதிவராகநல்லூர் கிராம மக்கள்.. குவியும் பாராட்டு
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். மேலும் பராமரிப்பின்றி வாய்க்கால் தூர்ந்து போய் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஏரியை கிராம மக்களே ஒன்று சேர்ந்து ரூ.8 லட்சம் நிதி திரட்டி 2 கி.மீ. தூரம் பாசன வாய்க்காலை தூர்வாரியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆதிவராகநல்லூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரி நீரை நம்பித்தான் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஏரி முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் 24 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி மற்றும் அந்த ஏரிக்கு வரும் பாசன வாய்க்கால் மோசமான நிலையில் தூர்ந்து போய் கிடந்தது. இது ஒருபுறம் எனில், பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள்.

இதனால் பருவமழை காலங்களில் தொடர் கனமழை பெய்தாலும் பாசன வாய்க்கால் நீர் முறையாக வர முடியாத நிலை இருந்தது. ஏரிக்கு முறையாக தண்ணீர் வரத்து இல்லாததால், முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி செய்ய வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் மனு அளித்துள்ளார்கள், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பஞ்சாயத்திலும் பாசன வாய்க்காலை தூர்வார போதிய நிதி இல்லை என கைவிரித்து விட்டதாம். இதனால் கிராம மக்கள், தூர்ந்து போன பாசன வாய்க்காலை மீட்டெடுக்க முடிவு செய்தார்கள். அதன்படி ஆதிவராகநல்லூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் ரூ.8 லட்சம் நிதி திரட்டியுள்ளார்கள்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆதிவராகநல்லூர் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூர்வார தொடங்கினார்கள். சுமார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்காலை தூர்வாரி, இருகரைகளிலும் மண் கொட்டி பலப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுவிட்டது. தற்போது பாசன வாய்க்கால் அகலமாகவும் தண்ணீர் வந்தால் எளிதாக ஏரியை அடையும் வகையிலும் இருக்கிறது. கிராம மக்களே ஒன்று சேர்ந்து நிதிதிரட்டி பாசன வாய்க்காலை தூர்வாரிய சம்பவம் கடலூர் மாவட்டம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராம மக்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications