வீடு கட்ட லஞ்சம் கேட்ட புகார்! கடலூர் மாநகராட்சி மேயர் பிஏ கைது! அடிபொடிகளால் திமுகவுக்கு அவப்பெயர்!
கடலூர்: வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி தர லஞ்சம் வாங்கிய புகாரில் கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதற்காக 10 ஆண்டுகளாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல.
தனது வெளிப்படையான நிர்வாகம், துரித நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் திமுக மீதான இமேஜை முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி வைத்திருக்கும் நிலையில் அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலரது செயல்பாடுகள் இருக்கின்றன.

அந்த வகையில் கடலூர் மாநகராட்சி திமுக மேயரின் உதவியாளர் ரகோத்தமன் உள்ளிட்ட 2 பேர் வீடு கட்ட லஞ்சம் கேட்ட புகாரில் கையும் களவுமாக சிக்கி கைதாகியுள்ளனர்.
கடலூரை சேர்ந்த பரணி என்பவர் தனது இடத்தில் புது வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை நாடியிருக்கிறார்.
இந்நிலையில் அவரிடம் கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் கட்டிட அனுமதிக்காக லஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் இது குறித்து முறையிட்டதன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேயரின் உதவியாளரை கைது செய்து கடலூர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் கவுன்சிலர்கள் போட்ட ஆட்டம் காரணமாக தான் 10 ஆண்டுகளாக திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என்பது திரும்பிபார்க்கத் தக்கது.
இப்போது மீண்டும் அதே கலாச்சாரம் மக்கள் பிரதிநிதிகளின் உதவியாளர்கள் ரூபத்தில் பரவி வருகிறது. இது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை பற்றி அடிபொடிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications