கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவுக்கு அதிகமாக வந்து போன கள்ளக்காதல் ஜோடிகள்.. பெரிய சம்பவம்
கடலூர்: கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் மருத்துக்குழுவினர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார்கள். மருத்துவக்குழுவின் சோதனையில், நர்சிங் பயிற்சி மையத்தில் கருக்கலைப்பு செய்தது போலி டாக்டர் தம்பதி என்பது தெரியவந்தது.இந்த விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தால் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிவதும், கண்டறிந்த பின்னர் கருக்கலைப்பு செய்வதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். சிலர் பணத்திற்காக சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையங்களை நடத்துகிறார்கள்.. அப்படிப்பட்ட மையங்களுக்கு அடிக்கடி மருத்துவக்குழுவினர் சென்று ஆய்வு நடத்தி, அவர்களை கைது செய்வது வாடிக்கையாகும். அந்த வகையில் கடலூரில் உள்ள கருக்கலைப்பு மையத்தில் கூண்டோடு சிக்கியுள்ளனர்.

கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக மாவட்ட மருத்துவக்குழுவினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதன்பேரில் கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக்குழு மற்றும் போலீசார் அந்த பயிற்சி மையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த குறிப்பிட் எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த 55 வயதாகும் சிவகுருநாதன், அவரது மனைவி உமாமகேஸ்வரி (40) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வைடிப்பாக்கத்தை சேர்ந்த கலியன் மகன் மருந்து விற்பனை பிரதிநிதியான மூர்த்தி (33), விருத்தாசலத்தில் இதேபோல் நர்சிங் பயிற்சி மையம் நடத்தி வரும் ஸ்ரீமுஷ்ணம் கார்மாங்குடியை சேர்ந்த வீராசாமி மகன் வீரமணி (36), கடலூர் அடுத்த காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை நர்சான நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த மைக்கேல் ராஜ்குமார் மனைவி அபியாள் (50), அங்கு மருந்தாளுனராக வேலை பார்த்து வரும் பெரிய காரைக்காட்டை சேர்ந்த ஆனந்தவேல் மனைவி தங்கம் (43) ஆகியோரும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக விசரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கருக்கலைப்புக்கு தேவைப்படும் மருந்து, மாத்திரைகள், ஊசி, கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தார்கள். சிவகுருநாதன் பி.எஸ்சி வேளாண்மை படித்து விட்டு, டெல்லியில் சித்த மருத்துவம் படித்ததாக சான்றிதழ் பெற்றுள்ளார். அந்த சான்றிதழை வைத்து, இங்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வந்திருக்கிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி நர்சிங் படித்துள்ளார்.
இவர்கள் 2 பேரும் அதே இடத்தில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். போலி மருத்துவம் பார்த்து, அங்கு வரும் தெரிந்த பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இங்கு கள்ளக்காதலில் கருவுறும் பெண்கள் தான் அதிக அளவில் வந்து, கருக்கலைப்பு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தவிர பள்ளி, கல்லூரி மாணவிகளும் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுபற்றி விசாரணை நடந்து வருவதாக கடலூர் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications