பச்சை குத்தப்பட்ட பாமகவின் "கலசம்".. உடனே சீண்டிய நபர்கள்.. திமுக ஆட்சின்னா? புலம்பும் கடலூர் பவானி
கடலூர்: பீச்சுக்கு குடும்பத்துடன் சென்ற பெண்களிடம் குடிபோதையில் 4 பேர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இந்த 4 பேரில் ஒருவர், "எங்கள் ஆட்சி நடக்கிறது, எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னாராம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் தரும்அளவுக்கு சென்றிருக்கிறார்கள். என்ன நடந்தது கடலூரில்?
கடலூர் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பவானி. குறிஞ்சிப்பாடி நகர பாமக மகளிரணி தலைவராக பவானி செயல்பட்டு வருகிறார். கடந்த 24-ம் தேதி மாலை, புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் குளிக்க சென்றுள்ளார்கள்.

அத்துமீறல்: பெண்கள் உட்பட அனைவருமே கடலில் குளித்து கொண்டிருந்தபோது, 4 இளைஞர்கள் மதுபோதையில் வந்து, ஆபாசமாக பேசி அத்துமீறியதாக தெரிகிறது. பவானி உள்ளிட்ட பெண்களையும் தாக்கியிருக்கிறது.. இதை தடுக்க முயன்ற பவானி கணவர் உள்ளிட்டவர்களையும் அந்த கும்பல் கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் ஆவேசமடைந்து, அந்த கும்பலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக பவானி, புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்ததையடுத்து, மாணிக்கவேல் (24), தினேஷ் (21), சரவணன் (22), பிரவீன் (24) ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள பிரவீன் தவிர மற்ற 3 பேரையும், புகார் தந்த அன்றைய தினமே கைது செய்தனர்.
மதுபோதை: எனினும், பவானி நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். அவர் சொல்லும்போது, "கடலுக்கு நான், எனது அண்ணன், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனைவரும் குளிக்கச் சென்றோம். அப்போது குடித்துவிட்டு சிலர் அங்கு வந்தனர். அவர்கள் போதையில் இருப்பதால், கடலில் குளித்துக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம்.
அப்போது மதுபோதையில் இருந்தவர்கள், என்னையும், அண்ணியையும் அங்கேயே விட்டுவிட்டுச் செல்லும்படி கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
கலசம் அடையாளம்: அப்போது நான் கையில் பச்சைக் குத்தியிருந்த கலசத்தை பார்த்துவிட்டு, என்னை யார்? என்று கேட்டார்கள். அதற்கு நான் பாமக நகரச் செயலாளராக இருப்பதாக சொன்னேன்.. இந்த ஒரு வார்த்தையைத்தான் சொன்னேன்.. அதற்கு "நீ நகரச் செயலாளராக இருந்தால், எனக்கு என்ன? இந்த கலசம் எல்லாம் எங்களுக்கு கீழேதான்" என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.. இது எங்களுடைய ஆட்சி, உங்களால் என்ன பண்ண முடியும்? என்று கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
கல்யாணமாகி 2 குழந்தைகளை பெற்ற நானே வெளியே வரமுடியவில்லை என்றால், எந்தப் பெண்ணால் வெளியே வரமுடியும்? மதுபோதையில் இருந்தவர்கள் போன் செய்தவுடன் அங்கு 20 இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாக ஓடிவந்து நின்றுவிட்டார்கள்.. எங்களால் போன்கூட செய்ய முடியவில்லை...
2 குழந்தைகள்: கையில் குழந்தையை வைத்திருப்பதால், அங்கிருந்து தப்பித்து வருவதைத்தான் நான் பார்த்தேன். என் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு வரவும் முடியாது. இதையெல்லாம் யார் கேட்பது? அந்த வீடியோவில் எங்களுடைய குழந்தைகள் அழுவதைக்கூட உங்களால் பார்க்க முடியும்.
நான் ஒரு பெண்... கட்சி ரீதியாக எதுவும் பேசவில்லை... என்னுடைய கையில் இருக்கும் கலசம் எப்போதோ குத்தியது, அதைக்கேட்டு எங்களிடம் சண்டை இழுத்தனர். இதையெல்லாம் யார் தட்டிக்கேட்பது? இதையெல்லாம் தட்டிக்கேட்டே ஆக வேண்டும். அதிலும் மதுபோதையில் இருந்த ஒருவர், நாங்கள் அப்படித்தான் அடிப்போம், நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லு, எவன் வருகிறான்? என்று பார்ப்போம் என்றார்.
திருநங்கை: அங்கிருந்த திருநங்கை அவர்கள் காலில் எல்லாம் விழுந்து, பிரச்சினைக்குப் பிறகுதான் வெளியே வந்தோம். எங்களுக்கு பீச்சில் நடந்த கொடுமைகள் அத்தனையும் வாட்ஸ்அப்பில் வீடியோவாகவும் பரவிவிட்டது. அதை பார்த்துவிட்டு, பலரும் என்னை அழைத்து கேட்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. என்னுடைய அண்ணன், அண்ணி குடும்பத்தினருக்கெல்லாம் இந்த சம்பவம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார் பவானி
அதேபோல, பவானியின் கணவர் முத்து இதுபற்றி சொல்லும்போது, "இந்தச் சம்பவத்தில் 4 பேர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
கமெண்ட்கள்: பீச்சில் நடந்த சம்பவ வீடியோவை கண்டு பொதுமக்கள், கொதிப்புடன் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆட்சியில் நிகழ்வது இது முதல் முறையல்ல. இதுபோன்ற சம்பவங்களை பலர் வெளியே கூறுவதில்லை, என்று கோபமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications