கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் நடந்தது என்ன? திருச்சி ரயில்வே மேலாளர் விளக்கம்
கடலூர்: கடலூரில் செம்மாங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கேட் கீப்பரிடம் விசாரித்து நடந்தது என்ன என்பது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேட் கீப்பர் பங்கஜ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினேன். அவர் சொன்னது என்னவெனில், " ரயில் வருவதாக போன் வந்ததுமே நான் கேட்டை மூடிவிட்டேன். ஆனால் பொதுமக்கள் கேட்டை திறக்குமாறும், ரயில் வருவதற்குள் கடந்து விடுமாறும் என்னை கேட்டனர்.

நான் முடியாது என சொன்ன போது அவர்கள் எல்லாம் சேர்ந்து என்னை மிரட்டினர். அதனால் வேறு வழியில்லாமல் திறந்தேன்" என்கிறார். அவர்கள் சொன்னால் "நீங்கள் ஏன் திறந்தீர்கள்" என நான் அவரை கடிந்து கொண்டேன். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்.
அவர் மது போதையில் இருந்தாரா என்பதை அறிய ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப சொல்லியிருக்கிறோம். இந்த விவகாரத்தில் பொதுமக்களும் ரயில் முற்றிலும் செல்லும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களும் ஒத்துழைத்திருக்க வேண்டும்.
எனினும் இந்த விவகாரத்தில் கேட் கீப்பர் அப்படி கேட்டை திறந்திருக்கக் கூடாது, அவர் அவ்வாறு திறந்ததும் தவறு. அதே வேளையில் கேட்டை திறந்துவிடுமாறு பொதுமக்கள் மிரட்டியதும் தவறு. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ 5 லட்சமும் , படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 2.50 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும்.
ஓட்டுநர் குடித்திருந்தாரா என்பது அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் தெரியும். பங்கஜ் சர்மா 2023 ஆம் ஆண்டு முதல் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். குரூப் டி பிரிவில் பணியில் சேர்ந்தார். அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்த கேட் நான் இன்டர்லாக்கிங் சிஸ்டம் கொண்டது.
அதாவது இந்த இடத்திற்கு முந்தைய ரயில் நிலையத்தில் இருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் புறப்படுவது குறித்து இந்த கேட் கீப்பருக்கு போன் செய்தார். அதை கேட் கீப்பரும் ஏற்று காலை 7.06 மணிக்கெல்லாம் கேட்டை மூடிவிட்டாராம். அப்படியிருக்கும் போது பொதுமக்கள் திறந்துவிடுமாறு கேட்டதால் இந்த விபத்து நடந்தது என ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 7.45 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் ரயில்வே கேட் இருந்தது. அதன் வழியே பள்ளி வேன் கடக்க முயன்றது.
இந்த நிலையில் பள்ளி வேன் சென்ற போது அந்த பகுதி வழியாக மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரயில், பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வேன் 50 மீட்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் நிவாஸ், சாருமதி, செழியன் ஆகிய குழந்தைகள் மரணமடைந்துவிட்டனர். விஷ்வாஸ் என்ற மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வேன் டிரைவர் சங்கர் கழுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications