கடலூர்: குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்த புகாரில் திடீர் திருப்பம்- கணவரின் பகீர் நாடகம் அம்பலம்!
கடலூர்: திருமணமான 25-வது நாளில் புதுமாப்பிள்ளைக்கு மனைவி கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை பழிவாங்க தாமே கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து குடித்துவிட்டு கணவர் நாடகமாடியது தற்போது அம்பலமாகிவிட்டது. இந்த சம்பவத்தில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்துவிட்டார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 20-ந் தேதி கலையரசன் மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலையரசன் அனைவரையும் அதிரவைக்கும் தகவல்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதாவது, மனைவி முதல் இரவிலேயே வேறொரு ஆணுடன் செல்போனில் வீடியோ காலில் பேசினார்; இதனால் மனைவியை கண்டித்தேன்; மனைவியோ கூல்டிரிங்க்ஸில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார்; இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் கலையரசின் வாக்குமூலம். இது தமிழ்நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக கடலூர் போலீசார், புகாருக்குள்ளான பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கலையரசனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசன் உயிரிழந்தார்.
இந்த நிலையில்தான் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், கலையரசின் செல்போன் பேச்சுகள் அடிப்படையில்தான் தற்போது உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
திருமணமான சில நாட்களிலேயே மனைவியுடன் கலையரசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது; இதனால் மனைவி மீது பழிபோட்டுவிட கலையரசனே உரக்கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி உள்ளார்; அந்த பூச்சி மருந்தை கூல்டிரிங்க்ஸில் கலந்து குடித்த உடனே, தமது நண்பனை செல்போனில் அழைத்து விவரத்தை சொல்லி இருக்கிறார்; உடனடியாக கலையரசனை அந்த நண்பர், மருத்துவமனையில் அனுமதிக்கிறார்; மனைவியை பழிவாங்குவதற்காக பூச்சி மருந்து குடித்து பொய்யான பழியைப் போட்ட கலையரசன் தற்போது உயிரையே இழந்திருக்கிறார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications