சோகத்திலும் சோகம்.. கடலூர் விபத்தில் உயிரிழந்த அக்கா, தம்பி.. 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர்!
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையறிந்த குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நிகழ்ந்துள்ளது. காலை 7.30 மணியளவில் நடந்த விபத்தில் பள்ளி வேனில் பயணித்த 3 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். சம்பவ இடத்திலேயே ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்த சூழலில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மற்றொரு மாணவரும் உயிரிழந்துள்ளார்.

பங்கஜ் சர்மா கைது
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதற்கு ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் கடைசி வரை கேட்டை மூடவில்லை என்றும், விபத்து நடந்த போதும் கேட் கீப்பர் தூங்கி கொண்டிருந்ததாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
தூக்கி வீசப்பட்ட பள்ளி வேன்
ரயில் மோதியதில் பள்ளி வாகனம் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வேன் சுக்கு நூறாக உடைந்துள்ளது. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், கால்களில் அணிருந்த ஷூ-க்கள் தண்டவாளத்தில் கிடந்தன. இதனை கண்ட பொதுமக்கள், பதைபதைத்து போயினர். இதனிடையே மாணவர்களுக்கு என்ன நடந்தது என்று காப்பாற்ற சென்ற ஒருவரும், மின்சாரம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 3 மாணவர்கள்
இந்த நிலையில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி தொண்டமாநாத்தத்தைச் சேர்ந்த விஜய சந்திரகுமாரின் மகன்கள் இருவர் பள்ளி வேனில் பயணித்துள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே நிமலேஷ் உயிரிழந்தார். மற்றொரு மகன் விஸ்வேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கா, தம்பி உயிரிழப்பு
அதேபோல் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி உயிரிழந்தார். இவரின் மகன் செழியன் படுகாயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செய்யப்பட்டார். தற்போது செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. ரயில் விபத்தில் தனது இரு குழந்தைகளையும் பெற்றோர் இழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கதறிய பெற்றோர்
விபத்து நடந்த சம்பவத்தை அறிந்து மருத்துவமனைக்கு உடனடியாக பெற்றோர் அழைத்து வரப்பட்டனர். அப்போது தங்களது குழந்தைகளின் நிலையை பார்த்த பெற்றோர், எதுவும் புரியாமல் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க செய்தது. ஏதும் அறியாத பிஞ்சு குழந்தைகள் ரயில் விபத்தில் உயிரிழந்திருப்பது மக்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications