சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்.. ஒரே போடாகப் போட்ட கே.எஸ்.அழகிரி!
கடலூர்: நாங்குநேரியில் நடைபெற்ற சாதிய கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "நீட் தேர்வை நாங்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ்நாடு பாடத்திட்டத்திற்கும் நீட் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மட்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் உள்ளது. நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கிறார்கள். படித்தது ஒன்று, தேர்வு வேறொன்றில் என்றால் எவ்வளவு பெரிய அறிஞராலும் அதில் வெற்றி பெறுவது கடினம்.

அதனால் தான் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். நீட் தேர்வு வணிகமயமாகிவிட்டது. ஆளுநர் இதில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறாரே தவிர அறிவுப்பூர்வமாக செயல்படவில்லை. சட்டமன்றத்திற்கு தான் முழு அதிகாரம் உள்ளது. சட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தான் ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தை அவமதிப்பது சட்டரீதியான குற்றம்.
நீட்டை எதிர்த்து இரண்டாம் முறையும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பும் போது நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை ஆளுநர் தெரிவிக்கவேண்டும். அதிகார வரம்பை தாண்டி ஆளுநர் செல்கிறார் இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அனைவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. யாரும் சர்வாதிகாரி கிடையாது. தமிழ்நாடு என்ன விரும்புகிறதோ அதைத்தான் நாம் மாநிலத்தில் செய்ய வேண்டும்.
அதனால் தான் எங்கள் கூட்டணி கட்சிகள் அவரது தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தோம். மழையே இல்லை, ஆனால், மழை காரணமாக தேநீர் விருந்தை ஒத்திவைப்பதாக பொய் சொல்லியிருக்கிறார். அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தேநீர் விருந்து வைக்க ஆளுநர் ரவிக்கே மகிழ்ச்சி இல்லை. எங்கள் கூட்டணி சென்று டீ குடித்தால் தான் அவருக்கு சந்தோஷம், மரியாதை." என்றார்.
மேலும் பேசிய கேஎஸ் அழகிரி, "நாங்குநேரி விவகாரத்தில் மாணவர்கள் இதுபோன்று செயல்படுவது அருவருக்கத்தக்கதாக உள்ளது. சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் காரணமாக அமைவது சாதிய உணர்வை தூண்டும் செயல்கள்தான். சாதியக் கட்சி என்று ஒன்று இருக்கக் கூடாது. நாங்குநேரி சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications