வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பி.ஏ.! ''சரியா குறிப்பு எடுய்யா''! அதட்டி கடிந்துகொண்ட அமைச்சர்!
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், அங்கிருந்த அலுவலர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.
மக்களிடம் இருந்து எத்தனை மனுக்கள் வந்துள்ளன, எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் பற்றிய காரணங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சர் கணேசன் அருகில் கையில் டைரியுடன் நின்று கொண்டிருந்த அவரது உதவியாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். ஏதோ டிக்டேட் செய்த அமைச்சர் கணேசன், அதை தனது உதவியாளர் குறிப்பெடுக்கவில்லை என்பதை அறிந்து லேசாக டென்ஷன் ஆனார்.
உதவியாளரை கையால் தட்டி, சரியா குறிப்பு எடுய்யா என அதட்டி கடிந்துகொண்டார். அமைச்சர் கணேசன் இவ்வாறு சொன்ன பிறகு பதறியடித்து தனது டைரியை திறந்து சின்சியராக குறிப்பெடுக்கத் தொடங்கினார் உதவியாளர்.
விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய போது அங்கிருந்த உடைந்த மேஜைகள் மற்றும் நாற்காலிகளை பார்த்த அமைச்சர் கணேசன், இதில் எப்படி அமர முடியும் எனக் கேட்டு உடனடியாக அதை மாற்றுவதற்கு உத்தரவிட்டார்.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஹேப்பி. உடைந்த மேஜை நாற்காலியை மாற்றக் கோரி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்த அவர்களுக்கு அமைச்சரின் இந்த ஆய்வு மூலம் விமோச்சனம் கிடைத்திருக்கிறது.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் கடந்த வாரம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்ட நிர்வாகப் பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்தார்.
முதல்வரின் ஆய்வுக்கு பிறகு அரசு அலுவலகங்களில் அமைச்சர்களின் ஆய்வுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications