அமைச்சர் காரை மறித்த விவசாயிகள்! டூ விலரில் ஆய்வுக்கு பறந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! ஒரே பரபரப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைமரங்களை பார்வையிடுவதற்காக சென்ற போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் காரை மறித்த விவசாயிகள் தங்கள் பகுதியிலும் சேதாரங்களை பார்வையிட வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
இதனால் வேறு வழியின்றி கார் செல்ல முடியாத இடங்களுக்கு கூட டூவிலரில் பயணித்து சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைமரங்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 1000க்கு மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமாகியிருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பேரிடியாக இறங்கி இருக்கிறது.
வாழை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு வாங்கிய கடனை கொடுத்து விடலாம் என விவசாயிகள் நினைத்திருந்த வேளையில் அவர்கள் எண்ணம் கானல் நீரானது. இந்நிலையில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியரோடு சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரிய இழப்பீடு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ராமாபுரம், ஓடியடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் மட்டும் ஆய்வு செய்தால் போதுமா, எங்க ஊருக்கும் வந்து பார்க்கணும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் வேறு வழியின்றி கார் செல்ல முடியாத இடங்களுக்கு கூட பைக்கில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு புறப்பட்டார் அமைச்சர் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications