அட நம்ம அமைச்சரா இது! சிரித்து சிரித்துப் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! பூரித்த திமுக நிர்வாகிகள்
கடலூர்: எப்போதும் முகத்தை கடுகடுவென வைத்துகொள்ளும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மிஸ்டர் கூலாக அமர்ந்திருந்தார்.
வழக்கமான தனது கோபத்தை துறந்து நிர்வாகிகளிடம் சிரித்து சிரித்துப் பேசியது அங்கிருந்தவர்களை பூரிப்படைய வைத்தது.
எல்லா மாவட்டச் செயலாளர்களும் கட்சி அலுவலகத்திலேயே செயற்குழு கூட்டம், செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி முடிக்கும் நிலையில், இவர் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஏசி திருமண மண்டபத்தில் விருந்துடன் கூட்டம் நடத்தியிருக்கிறார்.

கடலூர் கிழக்கு
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் வடலூரில் உள்ள ஏ.சி. திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. வழக்கமாக ஒயிட் அண்ட் ஒயிட்டில் வலம் வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஊதா கலர் சட்டை அணிந்துகொண்டு வந்திருந்ததுடன் மிஸ்டர் கூலாகவே கூட்டம் முடியும் வரை அங்கு அமர்ந்திருந்தார். இதனிடையே அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு நாவடக்கமும் கை அடக்கமும் ரொம்ப முக்கியம் என எடுத்துக் கூறினார்.

மேயர் -சேர்மன்
தங்களை சந்திக்க வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளின் உயர் பதவிகளில் இருப்பவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனது அறுவுரை கடலூர் மாவட்டத்துக்கு மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள மேயர்களுக்கும், நகராட்சி தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்திருக்கிறார்.

பின்னணியில் ஸ்டாலின்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த இந்த அறிவுரையின் பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தொண்டர்கள் மனம் நோகாமல் மாவட்டச் செயலாளர்களும், பொறுப்புகளில் உள்ளவர்களும் பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி கடுமை காட்டியிருந்தார்.

கை அடக்கம்
அதன் வெளிப்பாடாக தான் நாவடக்கம், கை அடக்கம் பற்றி அமைச்சர் இப்படி பாடம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் அலைபேசி உரையாடல்கள், அவர்களது தடிப்பான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில் இப்படி ஒரு எச்சரிக்கை கலந்து அறிவுரையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications