என்எல்சிக்கு எதிராக பாமக பந்த்..கடைகளை திறக்க உத்தரவிட்ட கடலூர் ஆட்சியர்..பாதுகாப்புக்கு உறுதி
என்.எல்.சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து பாமக கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளைய தினம் வழக்கம் போல கடைகளை திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வணிகர்களுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி.க்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் சனிக்கிழமை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொது மக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும்.

எனவே, நாளைய முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அது தான் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்டும். அதற்காக நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கும், 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கடலூரில் நாளைய தினம் கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும் எனவும், வாகனங்களை வழக்கம் போல இயக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வணிகர்களுக்கும், வாகனங்களை இயக்குபவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பு விடுத்த பாட்டாளி மக்கள் கட்சியுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் வணிக நிறுவனங்கள், பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications